Home இந்தியா சென்னை உற்பத்தி ஆலையை மூடுகிறது நோக்கியா!

சென்னை உற்பத்தி ஆலையை மூடுகிறது நோக்கியா!

603
0
SHARE
Ad

Nokia Microsoftசென்னை, அக்டோபர் 9 – தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்கி வந்த நோக்கியா செல்பேசிகள் தயாரிப்பு ஆலையை நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா, உலக அளவில் செல்பேசிகள் தயாரிப்பில் பெயர்பெற்ற நிறுவனமாகும். அந்நிறுவனத்தின் செல்பேசிகள் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான சேவைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பதாக, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அது நிறைவேறியது.

எனினும், நோக்கியாவிற்கு எதிராக தமிழக வருமான வரித் துறை தொடுத்திருந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், சென்னை அருகே அமைந்திருந்த நோக்கியா ஆலை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு கைமாறவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் வருமான வரித்துறை தொடுத்த வழக்கில் நோக்கியா, இந்திய அரசாங்கத்திற்கு 3,500 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, சென்னை ஆலை தொடர்ந்து நோக்கியாவின் வசமே இருந்து வருகின்றது.

nokia-axeஆலை தொடர்ந்து செயல்படும் விதத்தில் உற்பத்தியை மேற்கொள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மேலும், இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் அங்கு பணியாற்றும்  ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆலையை நவம்பர் மாதம் முதல் முற்றிலும் மூடப் போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

“நோக்கியாவின் சென்னை ஆலையில் தயாரிப்பு மேற்கொள்ள ஏற்படுத்திய ஒப்பந்தம் நவம்பர் 1-ம் தேதியுடன் முடிவடைகின்றது. மேலும், தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ள பணிகள் ஏதும் இல்லாத நிலையில், சென்னை அருகே அமைந்துள்ள ஆலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது”

“ஆலையை மூடும் முடிவினால், எங்களது ஊழியர்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. .

நோக்கியா நிறுவனம் சென்னையில் ஆலை அமைப்பதற்கு தடை இல்லா மின்சாரம், அதிக வரிச்சலுகை போன்ற பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது ஆலையை மூட இருப்பது தொடர்பாக கடும் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.