கோலாலம்பூர், அக்டோபர் 9 – தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைஃபுல் புக்காரியுடன் தாம் தகாத உறவில் ஈடுபடவில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை நீதிமன்றத்தில் தற்காப்பு மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார். “அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. தவறான நோக்கத்துடன் காவல்துறை என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. எனது அரசியல் வாழ்க்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற மறைமுக நோக்கத்துடனேயே தகாத உறவு என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது,” என்று அன்வார் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அன்வார் குற்றவாளி என கடந்த மார்ச் 7ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அன்வாரின் புதிய மனுவை கூட்டரசு நீதிமன்றம் வரும் 28ஆம் தேதி விசாரிக்க உள்ளது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில் அன்வாரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும். அவர் சிறை செல்லவும் நேரிடும்.
மலேசியாவில் அரசியல் சூழ்நிலைகளிலும் பெருமளவில் மாற்றம் ஏற்படும்.
தற்போது அன்வார் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.