மும்பை, அக்டோபர் 9 – ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தில் இணைந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலைய பகுதியை இன்று சுத்தம் செய்தார்.
அக்டோபர் 2-ஆம் தேதி ‘ஸ்வச் பாரத்’ என்ற திட்டம், நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்கத்தோடு மோடி தலைமையில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அதில் பங்கேற்க முன்வருமாறும் 9 பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பிரபலங்கள் பிரியங்கா சோப்ரா, கமல்ஹாஸன், சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அவர்களது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.
இந்நிலையில், பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தத் திட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தன்னை இணைத்து கொண்டதையும் அமிதாப் பச்சன், சானியா மிர்ஸா, ஷோபா தே, ஹ்ரித்திக் ரோஷன், நாகார்ஜூனா, பத்திரிகையாளர் சேகர் கபூர் ஆகியோரையும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை முன்னிட்டு அவர் இன்று மும்பையில் உள்ள சர்ச்கேட் ரயில் நிலைய பகுதியை தனது நண்பர்களுடன் சுத்தம் செய்தார். இதனிடையே அனில் அம்பானியின் பங்கேற்புக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தூய்மை இந்தியா’ என்ற கூறும்போது, “எனது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர் அனில் அம்பானியும் அவரது நண்பர்களும் சர்ச்கேட் ரயில் நிலையம் அருகே உள்ள இடங்களை சுத்தம் செய்துள்ளனர். இது மிகவும் அருமையான முயற்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.