Home வணிகம்/தொழில் நுட்பம் அனில் அம்பானிக்கு மேலும் சிக்கல் – கணக்குத் தணிக்கையாளர்கள் பொறுப்பு விலகல்

அனில் அம்பானிக்கு மேலும் சிக்கல் – கணக்குத் தணிக்கையாளர்கள் பொறுப்பு விலகல்

996
0
SHARE
Ad

மும்பை – நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. அவரது அதிகாரபூர்வ பதிவு பெற்ற கணக்குத் தணிக்கையாளர்களான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம், சில வணிகப் பரிமாற்றங்கள் குறித்துத் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், கண்காணிப்புகளுக்கும் முறையான, திருப்திகரமான பதில்களை அனில் அம்பானியின் நிறுவனங்கள் வழங்காத காரணத்தால், தாங்கள் கணக்குத் தணிக்கையாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று வியாழக்கிழமை அறிவித்தனர்.

உலக அளவில் புகழ்பெற்ற தணிக்கை நிறுவனங்களில் ஒன்றான பிரைஸ் வாட்டர்ஹவுஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கான தணிக்கைக் கணக்காய்வாளர்கள் ஆவர்.

தாங்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள், சுமுகமாகத் தீர்க்கப்படாவிடில் அனில் அம்பானி நிறுவனங்களின் நிதி அறிக்கை தொடர்பில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்திருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ், கணக்குத் தணிக்கைக்கான கூட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் அந்நிறுவனங்கள் நடத்தவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த நிலைமைகள் உருவாகியிருக்கும் காரணத்தால் தங்களால் தங்களின் பணிகளை ஒழுங்காகவும், சட்டப்படியும், நடுநிலையோடும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், அதனால், தங்களின் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதே உசிதம் எனக் கருதுவதாகவும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் தெரிவித்தது.

இந்த புதிய நகர்வு காரணமாக அனில் அம்பானி மேலும் இக்கட்டான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் என வணிக வட்டாரங்கள் கருதுகின்றன.