பெய்ஜிங், அக்டோபர் 9 – சீனாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுக்கான வர்த்தக முன்பதிவு, தொடங்கிய முதல் 6 மணி நேரத்தில் 2 மில்லியன்களைத் தாண்டியுள்ளது.
இதில் 64ஜிபி நினைவகத் திறன்கொண்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளை பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவற்றின் விலை முறையே 991 மற்றும் 1,121 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான வர்த்தகம் உச்சத்தில் இருப்பது சீனச் சந்தைகளில் தான். இதனை அறிந்த ஆப்பிள் நிறுவனம், சீனாச் சந்தைகளில் தனது திறன்பேசிகளுக்கான வர்த்தகத்திற்கு அதிக முனைப்பு காட்டி வந்தது. எனினும் சீன அரசாங்கம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற காரணங்களைக் முன்னிலைப்படுத்தி ஆப்பிள் வர்த்தகத்தை முடக்கி வந்தது.
இந்நிலையில், ஆப்பிள் தனது ஐபோன் 6 திறன்பேசிகளுக்கான வர்த்தகத்தை செயல்படுத்த சீனாவின் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்து, வரும் 17-ம் தேதி முதல் ஐபோன் 6 விற்பனையை தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சீன சந்தைகளில் தற்போது ஐபோன் 6 முன்பதிவுகள் வெற்றிகரமாக தொடங்கி உள்ள நிலையில், அதன் விற்பனை முந்தைய வெளியீடான ஐபோன் 5s-ன் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.