சென்னை, அக்டோபர் 9 – சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வந்து, மீண்டும் ஆட்சியில் அமரலாம் என ஜெயலலிதா நினைத்தால், அது கனவாகவே அமையும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இந்த கருத்தை முன்வைத்துள்ளார். எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் சுரண்டப்பட்ட இந்த வழக்கில் இனி மேல் தப்பித்து வந்து இந்த அம்மையார் ஆட்சிப்பீடத்தில் அமரலாம், தமிழ்நாட்டு மக்களை மீண்டும் மடையர்களாக ஆக்கலாம் என்று கருதினால், அது வெறும் கனவு தான்.”
“அந்தக் கனவு பலிக்காது, பலிக்காது என்பதை அண்ணாவின் மீது ஆணையாக, நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையின் மீது ஆணையாக நான் சொல்கிறேன்” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
“நம்மையெல்லாம் பார்த்து ‘‘தீயசக்தி” என்று சொல்கின்ற அளவுக்கு, அந்த அம்மையார் தன்னை உருவாக்கிக்கொண்ட இந்த காலகட்டத்திலே தான், அவருடைய வீழ்ச்சியை அவரே இன்றைக்குப் பாடமாகப் படிக்கின்ற ஒரு நிலை உருவாகியிருக்கின்றது.”
“திராவிட இயக்கத்தினுடைய வளர்ச்சியை இடையிலே வந்த ஜெயலலிதா போன்றவர்கள் அழிக்க நினைத்தாலும், அழித்து விட முனைந்தாலும், நாம் அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். தடுத்து நிறுத்தியே தீருவோம். இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது” என கருணாநிதி தெரிவித்துள்ளார்.