கோலாலம்பூர், அக்டோபர் 10 – மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) முடிவெடுத்தால், அதை தாம் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் மலாக்காவில் மஇகா கட்சியின் 67-வது பேராளர் மாநாடு மற்றும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3 தேசிய உதவித்தலைவர் பதவிக்கு டத்தோ சரவணன், டத்தோ சோதிநாதன், டத்தோ டி.மோகன், டத்தோ பாலகிருஷ்ணன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ தேவமணி மற்றும் ஜேம்ஸ் செல்வராஜூ ஆகியோர் போட்டியிட்டனர்.
அதே வேளையில், 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு, இரண்டு பெண்கள் உட்பட 88 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 1,452 பேராளர்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், முன்னாள் மஇகா இளைஞர் அணி தேசியத் தலைவர் டத்தோ மோகன் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள், மஇகா தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஜனவரி 10 -ம் தேதி, சங்கங்களின் பதிவிலாகாவிடம் புகார் அளித்தனர்.
மேலும், கட்சியின் தேசியத் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் மோகன் தலைமையில் இது குறித்த மகஜரும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது சங்கங்களின் பதிவிலாகா இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.
இது குறித்து நேற்று பழனிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மறுதேர்தல் நடத்துவது ஆர்.ஓ.எஸ் முடிவைப் பொறுத்தது. ஆர்.ஓ.எஸ் அப்படி ஒரு முடிவெடுத்தால், மஇகா அதனை பின்பற்றும்” என்று தெரிவித்தார்.