ஹாங்காங், அக்டோபர் 13 – ஜனநாயக சுதந்திரம் கேட்டு கடும் போராட்டங்களை முன்வைத்து ஹாங்காங் மக்கள் போராடி வரும் நிலையில், அந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
கடந்த 15 நாட்களாக ஹாங்காங்கில் மாணவர்கள் மற்றும் மக்கள் கடும் போராட்டங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீனா தலைமையில் இயங்கும் ஹாங்காங் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த வெள்ளிகிழமை முறையான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கபட்டது. எனினும் மோங்காக் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ரத்து செய்தனர்.
இந்நிலையில் ஹாங்காங் விவகாரம் குறித்து சீன அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், “போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் கை மறைந்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் கலவரத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிட்ட அமெரிக்கா, தற்போது ஹாங்காங் போராட்டத்திற்கும் தூண்டுகோலாக இருந்து வருகின்றது” என்று சீனா அரசு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயக நிதியத்துக்கான அதிகாரி ஒருவர் ஹாங்காங் போராட்டக்காரர்களை அடிக்கடி சந்தித்து வருவதாகவும், அவர் மூலமாக அமெரிக்கா, சீனாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சீன அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.