புதுடெல்லி, அக்டோபர் 13 – நோபல் பரிசு பெற்ற வெகு சில இந்தியர்களில் ஒருவரான கைலாஷ் சத்யார்த்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திர மோடி துவங்கி உள்ள ‘தூய்மை இந்தியா’ மற்றும் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டங்களுக்கு தனது பங்களிப்பையும் தர விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தியிடம், சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் மூலம் எவ்வாறு காணாமல் போன குழந்தைகளை கண்டறிவது என்பது குறித்து தனது கருத்துக்களை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்போது குழந்தை தொழிலாளர்களற்ற நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை மோடியிடம் தெரிவித்தார் சத்யார்த்தி.
குஜராத்தின் காந்தி நகரில் குழந்தைகளுக்கான உலகின் முதல் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டிருப்பதாக குறிப்பிட்ட மோடி, சத்யார்த்தியின் எதிர்கால பணிகள் சிறக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து சத்யார்த்தியை தாம் அன்புடன் அரவணைக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் மோடி.
விஞ்ஞானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் இந்தியர்கள் இதுவரை நோபல் பரிசு பெற்றிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை ஒருவர் பெறுவது இதுதான் முதன் முறையாகும்.