ஜோகூர் பாரு, அக்டோபர் 13 – ஜோகூர் மாநிலம் பெர்லிங் – பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் கொபேனா அருகே அமைக்கப்பட்டிருந்த சாலையைக் கடக்கும் மேம்பால நடைபாதை நேற்று மாலை 4.30 மணியளவில் சரிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் கனரக வாகன ஓட்டுநர் உட்பட 5 வாகன மோட்டிகள் காயமுற்றனர்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 50 வயதான கனரக வாகன ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உடனடியாக ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், புயல் காரணமாக சரிந்ததாக நம்பப்பட்ட மேம்பால நடைபாதை குறித்து தற்போது சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. தவறான வடிவமைப்பு தான் மேம்பால நடைபாதை சரியக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கட்டுமான ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் மாஹ்முட் முகமட் தாஹிர் கூறுகையில், மேம்பாலத்தின் மேற்கூரையில் எந்த ஒரு பிடிமானமும் இன்றி அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை தான் பாலம் சரிந்து விழக் காரணம் என்று இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிக காற்று வீசும் போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப்பலகையில் அதிக அழுத்தம் ஏற்படும் என்பதை கட்டுமான பொறியியலாளர் முன்பே யோசித்திருக்க வேண்டும் என்றும் மாஹ்முட் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுவது தப்பியது குறிப்பிடத்தக்கது.