சென்னை, பிப்.25- தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், பொய்யான குற்றச்சாட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் யுவராஜா. ஈரோட்டை சேர்ந்த இவர், தொடர்ந்து 2 முறை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், கட்சி மேலிடம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மின்னஞ்சல் மூலம், கட்சி ஒழுங்கு நடவடிக்கையின்படி பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அவருக்கு தகவல் அனுப்பியது.
பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் யுவராஜா 24.02.2013 அன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
23.02.2013 இரவு 11 மணிக்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சத்தோ எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான காரணம் கூறப்படவில்லை.
என் மனசாட்சிப்படி கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். யாரோ கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என்னை நீக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
இன்னும் ஓரிரு நாளில், சோனியாகாந்தியையும், ராகுல்காந்தியையும் சந்தித்து எனது தரப்பு நியாயத்தை கூறுவேன். ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 2-வது முறையாக நான் வெற்றிபெற்றேன்.
கடந்த 6 மாதமாக ஒருசிலர் விஷ கிருமியாக செயல்பட்டதின் பேரில் நான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். இன்று வரை கட்சி மேலிடம் எனது தரப்பு நியாயத்தை கேட்கவில்லை. என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கான காரணத்தை கூறவேண்டும்.
நான் டெல்லி சென்றபோது அனைத்து ஆதாரங்களையும் எடுத்து சென்றேன். ஆனால், அவர்கள் என்னை பதவி நீக்கம் செய்ய கூறினார்கள். என் மீது தவறு எதுவும் இல்லாத பட்சத்தில் நான் ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டேன். அதன்பின்னர், தற்போது என்னை பதவி நீக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் பேசினேன். மாவட்ட தலைவர்களும் எனக்கு ஆதரவாக தொலைபேசியில் பேசினார்கள். விரைவில் அவர்களை அழைத்துக் கொண்டு ராகுல்காந்தியை சந்திப்பேன். இவ்வாறு யுவராஜா கூறினார்.