Home இந்தியா ஹூட் ஹூட் புயல் பாதிப்பு: மோடி ஆந்திராவுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவிப்பு!

ஹூட் ஹூட் புயல் பாதிப்பு: மோடி ஆந்திராவுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவிப்பு!

689
0
SHARE
Ad

Narendra-Modi-01விசாகப்பட்டினம், அக்டோபர் 15 – ஹூட் ஹூட் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட  ஆந்திராவுக்கு உடனடி உதவியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு  அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஹூட்  ஹூட் புயல் ஆந்திராவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரையைக்  கடந்தது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால்,  ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அங்கு மிகப் பெரிய  பாதிப்பை ஏற்படுத்திய புயல், மற்ற கடலோர மாவடங்களிலும் பாதிப்பை  ஏற்படுத்தியது. இந்த புயலுக்கு 22 பேர் பலியாயினர். பலர்  காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களாக மீட்புப் பணிகள்  நடந்து வருகின்றன. மின் கம்பங்கள், கம்பிகள்  அறுந்து விழுந்ததால், விசாகப்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக  மின் விநியோகம் இல்லை.

பால், குடிநீர் விநியோகமும்  பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த இரு தினங்களாக  விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை கவணித்து  வருகிறார்.

இதனிடையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய  நேற்று விசாகப்பட்டினம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.  விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், விமான  நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

modi_seeingபின்னர்  விமானம் மூலம் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.  சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து  சந்திரபாபு நாயுடு, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்  ஆகியோருடன் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் மோடி கூறியதாவது; “புயலால் ஆந்திர  மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விசாகப்பட்டினம்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சேதத்தை மதிப்பீடு செய்யும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த இக்கட்டான  சூழ்நிலையில், மாநிலத்துக்கு உதவும் வகையில் உடனடி நிவாரணமாக  மத்திய அரசு சார்பில் ரூ.1,000 கோடி அளிக்கப்படும்”.

“புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும்,  காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக  அளிக்கப்படும். இது போன்ற காலகட்டத்தில் மாநில அரசுக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என மோடி தெரிவித்தார்.