புத்ராஜெயா, அக்டோபர் 15 – இந்த தீபாவளி சமயத்தில் கடந்த ஆண்டை விட கோழியின் விலை 70 காசு குறைந்துள்ளது. அதேவேளையில் உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 1 ரிங்கிட் அதிகரித்துள்ளது.
கோழி, ஆடு இரண்டு வகை இறைச்சிகளுமே தீபாவளி சமயத்தில் அதிகமாக வாங்கப்படும் பொருட்களாகும்.
பண்டிகை காலத்தில் விலை கட்டுப்பாட்டுக்குரிய உள்ள 14 பொருட்களுக்கான பட்டியலின்படி உரிக்கப்படாத கோழி (live chicken) விலை 5.70 ரிங்கிட், சாதாரண கோழி (standard chicken) விலை 7 ரிங்கிட், பெரிய அளவிலான கோழி (super chicken) 7.80 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எலும்பற்ற உள்ளூர் ஆட்டிறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 36 ரிங்கிட் எனவும், இறக்குமதி செய்யப்பட்ட எலும்பற்ற ஆட்டிறைச்சி விலை 25 ரிங்கிட் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை கட்டுப்பாட்டு நடவடிக்கை வரும் சனிக்கிழமை துவங்கி, பத்து நாட்கள் நீடிக்கும் என உள்ளூர் வர்த்தக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாசான் மாலேக் தெரிவித்தார்.
“தீபகற்ப மலேசியாவில் உள்ள 89 மாவட்டங்கள், சரவாக்கில் உள்ள 32 மாவட்டங்கள், சபா மற்றும் லாபுவானில் உள்ள 24 மாவட்டங்களில் இவையே உச்சபட்ச விலைப்பட்டியலாக இருக்கும். இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தும், அனைத்துப் பகுதிகளிலும் இப்பொருட்களின் வாராந்திர அதிகபட்ச விலையை கண்காணித்தும் இந்தப் புதிய விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன,” என்றார் ஹாசான் மாலேக்.