நியூயார்க், அக்டோபர் 20 – உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், போர் விமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், உலக நாடுகளுக்கு நாள் தோறும் பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்து செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து பிணைக் கைதிகளைக் கொன்று குவித்து வரும் அவர்கள், தற்போது உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் போர் விமானப் பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகின்றது.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் படையில் பணியாற்றிய போர் விமானி ஒருவர் தீவிரவாதிகளுக்கு விமான பயிற்சி வழங்கி வருகிறார் என சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரியாவின் அலெப்போ, ராக்கா மாகாணங்களில் சிரியா படையிடமிருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், சில விமான தளங்களைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில போர் விமானங்கள் அவர்கள் வசமாகியுள்ளன. எனினும், அவை பறக்கும் நிலையில் உள்ளனவா, அவற்றில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து இன்னும் சரிவரத் தெரியவில்லை.
சதாம் உசைனின் விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி, அலெப்போ மாகாணத்தின் ஜர்ரா நகர இராணுவ விமான தளத்தில் இந்தப் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜர்ரா நகரில், போர் விமானங்கள் அடிக்கடி தாழ்வாகப் பறப்பதாக அங்கு வசிக்கும் மக்களும் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் விமானத் தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ்-ன் போர் விமானப் பயிற்சி பற்றிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.