மும்பாய், அக்டோபர் 20 – சனிக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு மும்பாய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான ஆட்டத்தின் (turbulence) காரணமாக, விமானத்தில் பயணம் செய்த 8 பயணிகளும், விமானப் பணியாளர்கள் 14 பேரும் காயமடைந்தனர்.
அவர்களுக்கு நேர்ந்த காயங்கள் எவ்வளவு கடுமையானவை என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த 22 பேருக்கும் விமானம் தரையிறங்கியவுடன் உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
எஸ்ஐஏ 424 என்ற வழித்தட எண் கொண்ட அந்த விமானத்தில் 408 பயணிகளும் 25 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் தரையிறங்குவதற்காக கீழ் நோக்கிப் பறந்த போது அந்த சம்பவம் நடந்திருக்கின்றது.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி “எங்களின் இப்போதைய உடனடி நடவடிக்கை எங்களின் பயணிகள் மற்றும் பணியாளர்களில் நலன் மட்டுமே. மேற்கொண்டு நடைபெறும் எந்தவித விசாரணைகளுக்கும் எங்களின் நிறுவன அதிகாரிகள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்” என்று கூறியுள்ளார்.