புதுடெல்லி, அக்டோபர் 20 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அலை இன்னும் பலமாக வீசிக் கொண்டிருக்கின்றது என பாஜக தலைவர் அமிட் ஷாவின் முழக்கத்தை வழி மொழியும் விதமாக, ஹரியானா மாநிலத்தில் முதன் முறையாக பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளை வென்று பாஜக ஆட்சி அமைக்கின்றது.
41 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களையும், 90 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்ட அந்த மாநிலத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கொண்டு, பின்தங்கிய நிலையில் இருந்த பாஜக, இன்று மோடி அலையால் 47 தொகுதிகளை வென்றிருக்கின்றது. அதன் வாக்குகள் 24 சதவிகிதம் உயர்ந்திருக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகாலமாக ஹரியானாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி மோசமான முறையில் மண்ணைக் கவ்வியது. அதன் வாக்கு வங்கி 35.12 சதவிகிதத்திலிருந்து 20.6 சதவிகிதமாக வீழ்ந்தது. 15 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்கின்றது.
பாஜகவோ 33.2 சதவிகித வாக்கு வங்கியைக் கைப்பற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவின் மொத்தமுள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளில் 7ஐ வென்று சாதனை படைத்த பாஜகவின் வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தல் மீண்டும் ஒரு முறை பிரதிபலித்துள்ளது.
ஐஎன்எல்டி (INLD) எனப்படும் கட்சி, 19 தொகுதிகளோடு, இரண்டாவது நிலையில் வெற்றி பெற்று மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
மகராஷ்டிரா, ஹரியானா, இரண்டு மாநிலங்களிலும் பாஜக பெற்றுள்ள வெற்றியானது, காங்கிஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பாஜகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பாஜக தலைவர் அமிட் ஷா வர்ணித்துள்ளார்.