
கொழும்பு, அக்டோபர் 20 – இலங்கையில் 2015 ஜனவரியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
போப் பிரான்சிஸ் இலங்கைக்கு ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவரது வருகைக்கு முன்னதாக ஜனவரி 8 அல்லது 9ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறக்கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.
“ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதி தெரியும் என்றாலும், அதை இன்னும் உறுதி செய்யாததால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலாது,” என இலங்கை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலா செய்தியாளர்களிடம் கூறினார்.
இனம் மற்றும் மத வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தேச நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பொதுமக்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வாரம் நீக்கியிருப்பது, அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரானவர்களின் ஆதரவைப் பெற குறிப்பிட்ட தரப்பினர் மேற்கொண்ட முயற்சி என்று ரம்புக்வெலா மேலும் குற்றம்சாட்டினார்.