ஜாகர்த்தா, அக்டோபர் 20 – இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோகோ விடோடோவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஜாகர்த்தாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
இங்குள்ள இஸ்தானா மெர்டேகாவில் இந்தோனேசிய குடியரசின் அதிபராக திங்கட்கிழமை பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ. பதவியேற்பு நிகழ்வு முடிந்த பின்னர் அவரை பிரதமர் நஜிப் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கிடையிலான இச்சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
முன்னதாக ஜோகோ விடோடோவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க தமது துணைவியாருடன் ஞாயிற்றுக்கிழமை ஜாகர்த்தா சென்றிருந்தார் பிரதமர் நஜிப்.
அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் ஆகிய இருவரையும் பிரதமர் நஜிப் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அவர்களும் ஜோகோவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஜாகர்த்தா வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்பாட்டுடன் இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜோகோ விடோடோ
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரியுடன் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ.