Home கலை உலகம் திரைவிமர்சனம் : “கத்தி” – துள்ளல் விஜய், வித்தியாச கதைக்களம், புதிய சிந்தனையில் முருகதாஸ் –...

திரைவிமர்சனம் : “கத்தி” – துள்ளல் விஜய், வித்தியாச கதைக்களம், புதிய சிந்தனையில் முருகதாஸ் – மீண்டும் வெற்றிக் கூட்டணி!

908
0
SHARE
Ad

kaththi-movie-posterகோலாலம்பூர், அக்டோபர் 22 – வெளிவருமா, வராதா என பலத்த சர்ச்சைக்குள்ளான ‘கத்தி’ இன்று மலேசியாவிலும், தமிழகத்திலும், மற்றும் உலக நாடுகளிலும் வெளியாகி, இரசிகர்களின் ஏகோபித்த கைத்தட்டலைப் பெற்றிருக்கின்றது.

தமிழகத்தில் மட்டும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் (LYCA) முத்திரை சின்னத்துடன் விளம்பரங்கள் வெளிவராது என்ற சமரசத் தீர்வுடன் இன்று முதல் தமிழகத்திலும் கத்தி வெளியாகியுள்ளது.kaththi2

நேற்று  வந்த இளம் கதாநாயகர்களுக்கு ‘நான் ரெடி! நீங்கள் ரெடியா?” என சவால் விடும் அளவுக்கு விஜய் ஒல்லியான கில்லி உடம்புடன் சுறுசுறுப்பாகவும், துள்ளல் ஆட்டத்துடன் படம் முழுக்க வந்து அழகாக அசத்துகின்றார்.

#TamilSchoolmychoice

வழக்கம்போல் படத்தை பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக கார்களைப் அந்தரத்தில் பறக்கவிடாமல், கதாநாயகன் இருபது பேரை இருபது நிமிடம் சண்டை போட்டு வீழ்த்துவதாக காட்டாமல், மூளையைக் கசக்கி, முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து ஆழமாக யோசித்திருக்கின்றார் முருகதாஸ்.

ஏற்கனவே பல படங்களில் பார்த்த நிலத்தடி நீர், பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக ஆக்கிரமிப்புகள், கிராமத்து விவசாயத்தின் பாதிப்பு என பழக்கமான விஷயங்கள்தான் என்றாலும், அவற்றை நவீன வர்த்தகப் பிரச்சனைகளுடன் கோர்த்து, சமூகப் பிரக்ஞைகளையும் கலந்து, கிராமத்து இளைஞர்கள் நவீன காலத்தில் எதிர்நோக்கும் திண்டாட்டங்கள் என்ன என்பதை ஆழமாக யோசித்து திரைக்கதையில் விவரித்திருக்கும் முருகதாசின் உழைப்பு வீண் போகவில்லை.

இவற்றோடு, இரட்டைவேட விஜய்யின் ஆள்மாறாட்ட கலகலப்பும் சேர்ந்து கொள்ள, கத்தி திறமையான இயக்கத்தாலும், விஜயின் சிறந்த நடிப்பாலும் தனித்து உயர்ந்து நிற்கின்றது.

வித்தியாசமான கதைக்களம்

kaththi - vijayகொல்கத்தா சிறையிலிருந்து கதிரேசன் என்ற விஜய் தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகின்றது. அவர் ஏன் தப்பிக்கின்றார், எப்படிப் தப்பிக்கின்றார் என்பது பரபரப்புடன் காட்டப்படும் விதத்திலேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகின்றோம்.

கதிரேசனை சுருக்கி கத்தி என்று கூப்பிடுவதால்தான் கத்தி என்ற பெயர் படத்திற்கு. மற்றபடி அசல் கத்திக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை, ஒரு காட்சியில் விஜய் கத்தியால் குத்தப்படுகின்றார் என்பது தவிர!

சென்னைக்கு தப்பித்து வரும் கதிரேசன் – விஜய் அங்கு பழைய நண்பன் சதீஷோடு சேர்ந்து கொண்டு பாங்காக் தப்பித்து செல்ல முயல, அப்போது விமான நிலையத்தில்  சமந்தாவைச் சந்தித்து காதல் வயப்பட, அதனால் பயணத்தை ஒத்திப் போடுகின்றார்.

ஒருமுறை காரில் செல்லும் ஒருவனை ஒரு கும்பல் கொல்ல முயல, அதைப் பார்க்கும் விஜய் துப்பாக்கியால் சூடுபட்டவனைக் காப்பாற்ற முயற்சி செய்யும்போது அவனைப் பார்த்து அசந்து விடுகின்றார், காரணம், சூடுபட்டவன் அவரைப் போலவே இருக்கும் ஜீவா என்ற ஜீவானந்தம்.

ஜீவாவை,  மருத்துவமனையில் சேர்த்து, தனது பத்திரங்களை அவனோடு கதிரேசன் சேர்த்துவிட, ஜீவாதான் கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்த கைதி என்று கொல்கத்தா காவல் துறை அவனைக் கைது செய்து கொல்கத்தா கொண்டு போய்விடுகின்றது.

kaththiஇதற்கிடையில் சென்னையில் கதிரேசனை ஜீவா என்று நினைத்து ஒரு சிலர் அவனுக்கு பெரும் தொகையில் பணம் தர முயல அந்தப் பணத்தோடு வெளிநாட்டுக்கு ஓடிவிட திட்டம் போடுகின்றான் கதிரேசன்.

ஆனால், ஜீவாவின் பின்புலம் என்ன, அவனது போராட்டம் என்ன, அவனுக்கு ஏன் வில்லன் கோஷ்டியினர் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும்போது மனம் மாறுகின்றான் கதிரேசன்.

ஜீவா கொல்கத்தா சிறையில் சிக்கிக் கொண்டுள்ளான் என்பதால், அவனது போராட்டத்தைத் தானே முன்னின்று முன்னெடுத்துச் செல்ல கதிரேசன் முன் வருகின்றான்.

இடைவேளைக்குப் பின்னர் ஜீவாவின் ‘கூடங்குளம் அணுஉலை – உதயகுமார்” பாணியிலான போராட்டத்தை கதிரேசன் முன்னெடுத்துச் செல்வது, வில்லன் ஆட்களோடு மோதுவது, கொல்கத்தா சிறையிலிருந்து மீண்டும் ஜீவா திரும்புவதால் ஏற்படும் திருப்பங்கள் என பின்பாதி கதை நகர்கின்றது.

கிராமத்துக்கான நிலத்தடி நீர் போராட்டத்தில், முதியோர்களையும் மற்ற முதியோர் இல்ல உறுப்பினர்களையும் பொருத்தமாக இணைத்து பயன்படுத்திக் கொண்டிருப்பது முருகதாசின் திரைக்கதைத் திறனுக்கான சாட்சியம்.

விவசாயிகள் தற்கொலைகளை நெஞ்சம் பதைக்கும் வண்ணம் பொருத்தமாக திரைக்கதையில் இணைத்திருக்கின்றார்கள்.

இடைவேளைக்குப் பின்னர் கதையில் தொய்வு தெரிவதுபோல் தோன்றினாலும், அது பிரச்சனையின் ஆழத்தையும், விரிவையும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் சம்பவங்களோடு அவற்றை காட்சிப் படுத்த முனைந்ததால் ஏற்பட்ட தொய்வே தவிர, படத்தின் சுவாரசியத்தை அவை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் – விஜய்

இயக்குநரின் படைப்பாற்றலை தனது நடிப்பாற்றல் மூலம் வெளிக் கொணர்ந்திருக்கின்றார் விஜய். அவருக்கே அளவெடுத்துத் தைத்தது போல் பொருத்தமான வேடம். இளைஞனுக்கே உரிய துள்ளலோடும், கிண்டலோடும், தனது வழக்கமான பாணி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சின்னச் சின்ன உடல் மொழிகள், முக அசைவுகள், விழி ஜாடைகள் என மிகவும் நுண்ணிப்பாக உழைத்து நடித்திருக்கின்றார் விஜய்.

ஆள்மாறாட்ட இரட்டை வேடக் கதை என்றாலும், ஒரு விஜய்யை கொல்கத்தா சிறையில் வைத்து விட்டு கதையை நகர்த்துவதால், இரட்டை வேடங்களில் அதிக வித்தியாசத்தைக் காட்ட வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லாமல் போய்விட்டது.

நடனக் காட்சிகளிலும் விஜய்க்கு சொல்லித் தரவேண்டியதில்லை. அசத்தியிருக்கின்றார்.

சமூகப் போராட்டவாதி ஜீவானந்தம் பாத்திரத்தில் அடக்கியே வாசித்திருக்கின்றார் விஜய். அமைதியான பேச்சும் செயலுமாக ஒரு சாதாரண போராட்டவாதியை கண் முன் நிறுத்துகின்றார்.

ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்துவதாக காட்டியிருந்தாலும், ‘தலைவா’ படத்தில் காட்டியதைப் போல – நீதான் தலைவனாக வரவேண்டும், உன்னை விட்டால் வேறு ஆள் இல்லை – என்பது போன்ற தேவையற்ற அரசியல் உசுப்பேத்தல்கள் இல்லை.

நிலத்தடி நீர் ஆராய்ச்சி செய்பவராக வந்து பாத்திரத்தோடு இயல்பாகப் பொருந்தி, தேவையற்ற ஹீரோத்தனமான வசனங்கள் ஏதும் பேசாததால் விஜய்யின் கதாபாத்திரம் மனதில் நிற்கின்றது.

படத்திற்கு மெருகூட்டும் மற்ற அம்சங்கள்

படம் முழுக்க விஜய்க்கு இணையாக வரும் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பிலும், வசனங்களை தனித்துவமாக பிரயோகிப்பதிலும் சிறக்கின்றார். சந்தானம், சூரியின் தேதிகள் கிடைக்காதவர்கள் இனி சதீஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள்.

Samantha Vijay in Kaththi 500 x 300சமந்தா அழகாக வந்து பாடல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கும் தேவைப்பட்டுள்ளாரே தவிர மற்றபடி அவருக்கு படத்தில் வேலையும் அதிகமில்லை. நடிப்புக்கான வாய்ப்பும் அதிகமில்லை. பல காட்சிகளில் விஜய்யின் பக்கத்தில் ‘சும்மா’ நிற்கின்றார்.

சண்டைக் காட்சிகளில் விஜய் பலரை ஒத்தை ஆளாக அடித்து வீழ்த்துவது போல் காட்டியிருந்தாலும், அவர் ஒரு ரௌடி என்பதால் அந்த அம்சம் அவருக்குப் பொருந்திப் போகின்றது. அதோடு, ஒவ்வொரு முறையும் சண்டையில் ஈடுபடுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக, புத்திசாலித்தனமாக சில ஏற்பாடுகளைச் செய்து விட்டு அவர் சண்டையில் இறங்குவது இரசிக்க வைக்கின்றது.

kaththi,குறிப்பாக, அந்த சில்லறைகளை வீசி விட்டு சண்டை போடும் காட்சி.

சண்டைகள் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விடுகின்றன. மலேசிய தணிக்கைக் குழுவினரோ அல்லது இந்தியாவின் தணிக்கைக் குழுவினரோ சண்டைக் காட்சிகளில் பலமாக கத்திரிக்கோல் வைத்து நீளத்தைக் குறைத்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

நீர் இல்லாத பிரச்சனையால் ஒரு கிராமம் சந்திக்கும் தொந்தரவுகளையும், அதன் மக்கள் படும் அவதிகளையும் காட்டிவிட்டு, அதே தண்ணீர் இல்லாவிட்டால் சென்னைவாசிகள் சந்திக்கும் அல்லல்களை விரிவாகக் காட்டியிருப்பது நல்ல ஒப்பீடான சிந்தனை.

படத்தின் உச்ச கட்டம், சென்னைக்கே நீர் வராமல் நிறுத்தி வைக்கும் விஜய்யின் சாமர்த்தியம். அதனை முதியோர் கூட்டத்தை வைத்துக் கொண்டு விஜய் எப்படி  நிகழ்த்திக் காட்டுகின்றார் என்பது படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய முருகதாசின் புத்திசாலித்தனம்.

பல இடங்களில் நடப்பு சமூகப் பிரச்சனைகளை சாமர்த்தியமாக உள்ளே நுழைத்திருக்கின்றார் முருகதாஸ். வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழகத் தொழிலாளர்களின் அவலங்களையும் புகுத்தியிருக்கின்றார்கள்.

ஒரு சமூகப் போராட்டத்தை, கிராமத்து அடித்தட்டு மக்களின் அவலங்களை பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும் எடுத்துக் கொண்டு செல்வதில் ஏற்படும் சவால்களையும் சுட்டிக் காட்டி தகவல் ஊடகங்களின் போக்கிற்கும் ஒரு குட்டு வைத்திருக்கின்றார்கள்.

அதற்கு தீர்வாக, தகவல் ஊடகங்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திசை திருப்ப கிராமத்து பெரிசுகள் எடுக்கும் அதிரடி முடிவும் ‘பகீர்’ ரகம்!

அனிருத்தின் பின்னணி இசை பல இடங்களில் தாளம் போட வைக்கின்றது. அதிலும் குறிப்பாக விஜய் சாமர்த்தியமாக ஏதாவது செய்யும்போது பின்னணியில் ஒலிக்கும் மெட்டு கவர்கின்றது. அதிலும் தண்ணீர் குழாயில் அவர் அமர்ந்திருப்பதை தலைகீழாக காட்டும் கேமரா கோணத்தோடு, பின்னணியில் ஒலிக்கும் அனிருத்தின் இசை திரையரங்கையே அதிர வைக்கின்றது.

பாடல்கள் சுமார் ரகம்தான். ஆட்டத்தோடு பார்க்கும்போதுதான் இரசிக்க முடிகின்றது.

படத்தின் குறைகள்

kaththi_al_live024குறைகள் எதுவும் வெளியே தெரியாதபடி கதையைக் கொண்டு போயிருக்கின்றார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய திரைக்கதை ஓட்டை என்றால், வில்லன் என்பதற்காக ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி அப்படியா கீழ்த்தரமான வில்லத்தனங்களில் ஈடுபடுவார் எனக்கேட்கத் தோன்றுகின்றது.

அதிலும் இறுதிக் காட்சிகளில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும் ஒன்றாக, வில்லத்தனத்திற்கு ஆதரவாக இணைவதும், பன்னாட்டு நிறுவன முதலாளிகள் ஆளாளுக்கு அடியாட்களைத் தயார் செய்வதும், கொஞ்சம் நெருடல்தான். எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று காட்டியிருக்கின்றார்கள்.

மற்றபடி வழக்கம்போல் நாட்டில் காவல் துறையினர் யாருமே இல்லை என்பதைப் போல் காட்டியிருக்கின்றார்கள். கிராமத்தில் துடிப்புடன் செயல்படும் காவல் துறையினர் சென்னையில் எத்தனை களேபரம் நிகழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றொரு குறை.

படம் முடிவடையும் இறுதிக் காட்சியில் விஜய் கையசைத்து விடைபெற்றுச் செல்லும்போது திரையரங்கம் முழுவதும் கரவோசை எழுப்பி தங்களின் அங்கீகாரத்தை பகிரங்கப்படுத்துவதே,

துப்பாக்கிக்குப் பின்னர் ‘கத்தி’யில் இணைந்த விஜய் – முருகதாஸ் கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கான அடையாளம்.

– இரா.முத்தரசன்