புதுடெல்லி, அக்டோபர் 24 – ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையைப் பெற உள்ளார் நரேந்திர மோடி.
அடுத்த மாதம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக மோடி ஆஸ்திரேலியா வருவதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவிலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தனது உரையை இந்தியிலேயே நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினால் இந்தியாவின் மதிப்பு, கலாச்சாரம், பலங்கள் ஆகியவற்றை ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டு வருகிறார் என்று அர்த்தம்,” என டாஸ்மேனியாவைச் சேர்ந்த செனட்டர் லிசா சிங் (படம்) கூறியுள்ளார்.
“அனைத்தையும் விட அவர் எங்கள் நாட்டிற்கு வருகை புரிவது மிக முக்கியமானது. எங்கள் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவது பெருமைக்குரிய ஒரு தருணம். அவர் எந்த மொழியில் உரையாற்றுகிறார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. இந்திய வம்சாவளியினரை மதிக்கும் வகையில் இந்தியில் உரையாற்றுவது சிறப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டால் அவர் இந்தியிலேயே உரையாற்றலாம் என நினைக்கிறேன். இந்தியா தனித்துவமிக்க நாடு என்று கருதும் அவரைப் போன்ற ஒருவர், தனது தாய்மொழியில் பேசுவதையே விரும்புவார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆஸ்திரேலியர்கள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்,” என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முதல் இந்திய வம்சாவழி உறுப்பினரான 42 வயது லிசா சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15-16 தேதிகளில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி. இம்மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.