அக்டோபர் 24 – நாம் அன்றாட உணவுப் பழக்கவழக்கத்தை சரியாக வைத்திருந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குறிப்பாக மதிய உணவை நாம் நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் சிறந்த மதிய உணவை செய்து கொடுக்க வேண்டும்.
ஏன் என்றால், காலையில் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் செல்லும் அவசரத்தில் சமைத்த அல்லது ரொட்டி, பிஸ்கட் போன்ற எதையாவது ஒன்றை வேகவேகமாக சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறோம். சிலர் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்தே விடுகின்றனர்.
இது மிகவும் தவறு. காலை உணவை நிச்சயமாக சாப்பிட வேண்டும். அதுதான் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குடை மிளகாய், தக்காளி, வெள்ளரி, வெண்ணெய் போன்றவற்றை காலை உணவோடு சேர்ப்பது மிகச் சிறந்தது.
அதுபோல, இரவில் சாப்பிட்டுவிட்டு உடனே உறங்கச் சென்று விடுகிறோம். எனவே, அந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிட முடியாமல் போகிறது.
இதனால், மதிய உணவைத் தான் மிக முக்கியத்துவம் கொடுத்து நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஒரு மதிய உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் நிறைந்திருக்கலாம்.
இது சீரான உடல் வாகுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள் இதில் பால் பொருட்களை தவிர்த்து விடலாம். சாதத்துடன், காய்கறிகள், அவித்த கடலை, காராமணி போன்றவற்றை சாப்பிடலாம்.
சில சமயங்களில் தயிர் பச்சடி செய்து அதில் கேரட், வெங்காயம், வெள்ளரி என பிடித்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதத்துக்கு ஒரு குழம்பு வைக்கும் போது கூடுதலாக மோர் அல்லது தயிரையும் இணைத்துக் கொள்ளலாம்.
அசைவ உணவு சாப்பிடுவோர் மதிய வேளையில் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளை சமைக்க நேரமே இல்லை என்று கூறுபவர்கள் கூட வெறும் காய்கறிகளை நறுக்கி உப்பு போட்டு அவித்து அதில் மிளகு தூள் தூவியும் சாப்பிடலாம்.