கோலாலம்பூர், அக்டோபர் 27 – இன்றிரவு மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் உரையாற்றியே தீருவேன் என எதிர்க் கட்சித் தலைவரும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவருமான அன்வார் இப்ராகிம் சூளுரைத்துள்ள வேளையில், திட்டமிட்டபடி அன்வாரின் உரை நடைபெறும் என மாணவர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மலாயாப் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஃபாமி சைனோல் தலைமையிலான மாணவர் சங்கம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் இந்த கூட்டத்திற்கு அனுமதியில்லை என்றும் மலாயாப் பல்கலைக் கழகம் முழுக்க முழுக்க காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கின்றது என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்ததாக ஏற்கனவே வந்த செய்திகள் தெரிவித்தன.
ஆனால், பல்கலைக் கழகத்தின் உள்விவகாரங்களின் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் பல்கலைக் கழகத்தின் வாயிலுக்கு வெளியேதான் நாங்கள் காவல் இருப்போம் என்றும் காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டால், அன்வார் இப்ராகிம் பல்கலைக் கழக வாயிலிலேயே உரையாற்றுவார் என்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் இணையத் தள தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(மேலும் செய்திகள் தொடரும்)