வாஷிங்டன், அக்டோபர் 27 – பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவன் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு காரணமாக அப்பள்ளி மாணவி ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபிரைபெர்க் என்ற அம்மாணவன் பின்னர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றி வளைத்த காவல் துறையினர்…
வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரில் மேரிஸ்வில்லே ஃபில்சக் என்ற உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. ஏராளமான மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில் சிற்றுண்டி சாலை ஒன்றும் உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று காலை இந்த சிற்றுண்டிச் சாலையில் மாணவர்கள் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் திடீரென அங்கு வந்தான் ஃபிரைபெர்க். பின்னர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சக மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டிருக்கிறான். இதில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார்.
மேலும் 2 மாணவர்கள், 2 மாணவியர் மீதும் குண்டு பாய்ந்ததில் அவர்கள் நால்வரும் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மரணமடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பிரார்த்தனை…
துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த போலிசார் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற மாணவர்களை பேருந்துகளில் ஏற்றி அருகில் உள்ள தேவாலயத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய ஃபிரைபெர்க்கை தேடியபோது, பள்ளி வளாகத்திலேயே அவன் பிணமாகக் கிடப்பது தெரிய வந்தது. அவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
பள்ளியின் மல்யுத்த மற்றும் காற்பந்து அணிகளில் இடம்பெற்றிருந்த ஃபிரைபெர்க், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினான் என்பது தெரியவில்லை. எனினும் சக மாணவனுடன் சண்டையிட்ட கோபத்தில் அவன் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை இதுபோன்ற 90 சம்பவங்கள் நடந்துள்ளன.
கானடிகட் சாண்டி ஹுக் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பள்ளி குழந்தைகளும், 6 ஊழியர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: EPA