Home அரசியல் மீண்டும் சிலாங்கூரை எதிர்க்கட்சி கைப்பற்றினால் இரண்டு தவணைகள் மட்டுமே மந்திரிபுசார் பதவி வகிக்க முடியும் –...

மீண்டும் சிலாங்கூரை எதிர்க்கட்சி கைப்பற்றினால் இரண்டு தவணைகள் மட்டுமே மந்திரிபுசார் பதவி வகிக்க முடியும் – டான்ஸ்ரீ காலிட் அறிவிப்பு

601
0
SHARE
Ad

kalidபிப்ரவரி 25 –  மக்கள் கூட்டணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால், இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் சிலாங்கூர் மந்திரிபுசார் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்டதிருத்தத்தைத் தான் முன் மொழியப் போவதாக நடப்பு மந்திரிபுசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் (படம்) அறிவித்துள்ளார்.

சிலங்கூர் சுல்தானின் அங்கீகாரத்தோடு தாம் இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவரவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய மக்கள் ஓசை தமிழ் நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சிலாங்கூர் மந்திரிபுசார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றினால் எது உங்கள் முக்கிய பணியாக இருக்கும் என்ற கேள்விக்கு டான்ஸ்ரீ காலிட் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் நீண்ட காலமாக இழுபறியில் உள்ள மாநில தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த 9.65 பில்லியன் வெள்ளியிலான பரிந்துரையை முன்வைத்துள்ளதாகவும், மக்களின் அடிப்படைத் தேவையான தண்ணீரை தனியார் நிறுவனம் மூலம் வர்த்தகம் செய்யாமல் மாநில அரசே தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யும் என்றார் அவர்

எப்படி தேசிய முன்னணி ஏதும் செய்யவில்லை என்றால் யாரும் நம்பமாட்டார்களோ, அதைப்போலத்தான் மக்கள் கூட்டணியின் ஐந்தாண்டுகால சாதனையை யாரும் மக்கள் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது என்றார். காலிட்.

ஒட்டுமொத்த மாநில மக்களுக்கும்,அவர்களது தகுதி, திறமை, பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரியான திட்டங்களை வரைவதாக அவர் தெரிவித்தார்.

தோட்டப்பாட்டாளியின் பிள்ளைகளுக்கு முறையான தொழிற் பயிற்சிகள் கொடுத்து, புதிய துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும், 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு அதனை பட்டா செய்து கொடுப்பதறகான முயற்சிகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் சுனாமி ஏற்படுத்திய 2008 தேர்தல் வெற்றிக்குப் பிறகு சிலாங்கூர் மாநில அரசின் தலைமைப் பீடத்தை மக்கள் கூட்டணி ஏற்றபோது அரசாங்க நிதிக் கையிருப்பில் இருந்தது வெறும் 400 மில்லியன் மட்டுமே என்றும் தங்களது ஐந்தாண்டுகால ஆட்சிக்குப்பின் அந்த கையிருப்பு 2500 மில்லியன் ஆக உயர்ந்திருக்கின்றது என்றும் அதற்கான தஸ்தாவேஜூகள் அனைத்தும் மாநில அரசின் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கும்,மத்திய அரசிடமும் உள்ளதாகவும் காலிட் மேலும் குறிப்பிட்டார்.

தங்களின் தூய்மையான ஆட்சியால் மட்டுமே இத்தகைய வளமான நிதிக் கையிருப்பு சாத்தியமாயிற்று என்றார் அவர்.

சிலாங்கூர் 23 சதவீத வருவாய் பெற்றுத் தந்தது.

அதோடு 48 பில்லியன் அந்நிய முதலீட்டை ஈட்டி மலேசியாவிலேயே அதிக அந்நிய முதலீடு பெற்ற மாநிலமாக சிலாங்கூர் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த வருவாயில் 23 சதவீதம் சிலாங்கூர் மாநிலம் ஈட்டித் தந்த வருவாய் என்றும், டத்தோஸ்ரீ நஜிப் எடுத்துக்கொடுக்கும் ஒவ்வொரு வெள்ளியிலும் 23 காசு சிலாங்கூர் மாநிலம் ஈட்டியது என்றார் டான்ஸ்ரீ காலிட்.

‘தேர்தலில் தோல்வியடைந்தால் கலவரத்தில் ஈடுபடுவீர்கள்’ என்ற துன் மகாதீரின் கருத்துப் பற்றி  எழுப்பப்பட்ட  கேள்விக்கு, பதிலளித்த  டான்ஸ்ரீ காலிட் மக்கள் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைப்போம். ஒருவேளை தேசிய முன்னணி தேர்வு செய்யப்பட்டால், எங்கள் ஆட்சியில் வலுப்படுத்திய நிதிக் கையிருப்பை, மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாதீர்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து வழிவிடுவோம் என்று காலிட் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்..

 

.