டமாஸ்கஸ், அக்டோபர் 30 – உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளனர். ஈராக்கைத் தொடர்ந்து சிரியாவிலும் கடும் ஆயுதப் போராட்டம் நடத்தி பல்வேறு நகரங்களைத் தன் வசப்படுத்தி உள்ளனர்.
சிரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிழக்கு பகுதியில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான ரக்ஹாவை கடும் தாக்குதல்களை நடத்தி இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து தற்போது இட்னிட் நகரை கைப்பற்ற அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் உள்ள இந்த இட்னிட் நகரம் அலெக்போ மற்றும் கடற்கரை நகரமான லடாகியாவிற்கு இடையே உள்ளது. இதனைக் கைப்பற்றினால் மற்ற இரு நகரங்களையும் கைப்பற்றுவது அவர்களுக்கு சுலபான ஒன்றாகி விடும். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நகருக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு அரசின் பிடி நிலைகுலைந்து போனது. பின்னர் அங்கு புதிதாக திறக்கப்பட்ட ஆளுநர் அலுவலகத்தை கைப்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்தனர். இந்நிலையில், அவர்களை மீட்க சிரிய அரசு முயற்சிகளை எடுப்பதற்குள், சுமார் 70-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்து கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் அவர்களின் பிடி இறுகி உள்ளதால், உலக நாடுகள் கடும் நெருக்கடியில் உள்ளன.