கொழும்பு, அக்டோபர் 30 – இலங்கையின் மத்தியப் பகுதியில் நேற்று காலை கடும் நிலைச்சரிவு ஏற்பட்டது. கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டதாகக் கூறப்படுகின்றது.
மீட்புப் பணிகளின் போது 10 பேர் சடலமாக மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இலங்கையின் மலைப்பாங்கான பதுளை மாவட்டத்திலுள்ள மீரியபெத்தை தேயிலைத் தோட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. பல வீடுகளில் 30 அடி உயரத்துக்கு மண் சரிந்துள்ள நிலையில், அதில் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து இராணுவ உயர் அதிகாரி மனோ பெரேரா கூறுகையில், “நிலச்சரிவு ஏற்பட்ட போது ஒரு சில வீடுகள் 9 மீட்டர் ஆழத்துக்குச் சென்று சகதிக்குள் புதைந்து விட்டன. போதிய வெளிச்சமின்மை காரணமாக, மாயமானவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு பல பகுதிகளில் நிலச் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.