பெய்ரூட், அக்டோபர் 31 – சிரிய இராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது, தவறுதலாக அகதிகள் முகாம் மீது நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 28 குழந்தைகள் உட்பட 75 அப்பாவி மக்கள் பலியாகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த சில வருடங்களாகப் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் பங்கெடுத்த பிறகு கடும் ஆயுதப் போராட்டமாக உருமாறியது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பலியாகி வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிரிய இராணுவமும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர்களின் முகாம்கள் மீது விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹமா மாகாணத்தில் சண்டை காரணமாக, உயிருக்குப் பயந்த மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து இட்லிப் மாகாணத்தில் உள்ள அபேதின் என்ற இடத்தில் முகாமிட்டு தங்கி இருந்தனர்.
அந்த சமயத்தில் அரசின் விமானம் ஒன்று தவறுதலாக பொது மக்கள் இருந்த முகாமை தீவிரவாதிகள் முகாம் எனக் கருதி 2 பீப்பாய் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் சிக்கி அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 75-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரிய இராணுவத்தின் கவனக் குறைவால் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.