லாகூர், நவம்பர் 3 – இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள வாகா எல்லையில், நேற்று நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 55 பேர் பலியாகி உள்ளனர். 120-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வாகா எல்லையில் பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கே வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
பெரும் சத்தத்துடன் வெடித்த குண்டுகளால் அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் 55 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறை உயர் அதிகாரி முஸ்டாக் சுகேரா கூறுகையில்,
“கொடி இறக்க நிகழ்ச்சியின் போது தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். அணிவகுப்பு முடிந்து, கூட்டத்தினர் புறப்படுகின்றபோது, இந்த தாக்குதல் நடந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகமாகி உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.