பிப்ரவரி 25 – இந்து சமயத்தை தமது கட்டுரையில் இழிவுபடுத்திய ரிட்ஸூவான்,மற்றும் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமரை நெருக்காவிடில் நான் இந்திய வாக்காளர்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்துவேன் என எஸ். வேள்பாரி பிரி மலேசியா டுடே செய்தி இணையத் தளத்திற்கு அண்மையில் வழங்கிய செய்தியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இதற்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மான்யம் வழங்கும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர் ஒருவர் ரிடுவான் அப்துல்லா தொடர்பில் கேள்வி கேட்டபோது, இந்தியர்களையும், அவர்கள் சார்ந்த சமயத்தை மட்டுமல்லாது, ம இ கா இந்திய சமுதாயத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் கட்டுரை எழுதிய ரிடுவான் அப்துல்லா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாம் பிரதமரை சந்திக்கவிருப்பதாக ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரிடுவான் அப்துல்லா யார் என்பதும், எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதும் தமக்குத் தெரியாது என்றார். ரிடுவான் அப்துல்லா சினரான் மலாய் தினசரியில் எழுதிய இக்கட்டுரை, இந்தியர்களின் மனதை வெகுவாக புண்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இது போன்ற கட்டுரைகள் இனியும் வெளிவராமல் இருக்க பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக திரு. வேள்பாரி அக்கட்டுரையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமரை ம.இ.கா தேசியத்தலைவர் பழனிவேல் வற்புறுத்தாவிட்டால் தாம் எதிர்கட்சிக்கு வாக்களிக்க மக்களை கோரப்போவதாக பழனிவேலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இதுவரை அமைதி காத்திருந்த பழனிவேல் இப்போது வேள்பாரியின் அறிக்கைக்குப் பின்னர் வாய் திறந்து ரிடுவான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமரை வற்புறுத்துவதாக கூறுவது வேள்பாரியின் அறிக்கை தந்த நெருக்குதலால்தான் எனக் கூறப்படுகின்றது.
வேள்பாரியின் அறிக்கையைத் தொடர்ந்து கட்சியில் எழுந்த சலசலப்பை அடக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு உள்ளான பழனிவேல் இதனால் இவ்வாறு உடனடியாக அறிக்கை கொடுத்திருக்கின்றார் என்றும் ம.இ.கா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.