பாக்தாத், நவம்பர் 4 – ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 50 பழங்குடியின ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கிராமங்களை சூறையாடுவது, பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்குவது, ஆட்களை கொலை செய்வது என்று அட்டூழியம் செய்து வருகிறார்கள்.
அவர்களால் கடத்தப்பட்ட பெண்கள் சந்தைகளில் ஆடு, மாடுகளைப் போன்று விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அன்பார் மாகாணத்தில் உள்ள ரமதியின் வடக்கே இருக்கும் ராஸ் அல் மா கிராமத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்தனர்.
அவர்கள் அக்கிராமத்தில் வசித்த 40 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளை பொது இடத்தில் வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இது தவிர 17 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த தகவலை அல் பு நிம்ர் பழங்குடியினத்தின் மூத்த தலைவர் ஷேக் நைம் அல் கௌத் தெரிவித்தார். மேலும் இந்த தகவலை அன்பார் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். கடந்த மாதம் மட்டுமே 1,273 பேர் வன்முறை சம்பவங்களில் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.