வாஷிங்டன், நவம்பர் 5 – உலகை தீவிரவாதத்தால் அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், பிணைக் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்படுவதைப் படம் பிடித்து சிறுவர்களிடம் கட்டாயப்படுத்திக் காண்பிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆயுதப் போராட்டம் நடத்திவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு நகரங்களை தங்கள் வசப்படுத்தி மக்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.
இதுதவிர குர்து இன சிறுவர்கள் 150 பேரைக் கடத்தி, கடந்த 6 மாதங்களாக தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில், தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் 4 பேரை அனைத்துலக மனித உரிமைகள் ஆணையம் விசாரித்த பொது ஐஎஸ்ஐஎஸ்-ன் பல்வேறு கொடுமைகள் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தினமும் 5 முறை தொழுகை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மத போதனைகளை தீவிரமாக பின்பற்ற அவர்கள் வற்புறுத்துப்பட்டுள்ளனர்.”
“மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிணைக் கைதிகள் கடத்தப்பட்டு தலை கொய்து படுகொலை செய்யப்படும் காணொளிகளையும் அவர்களுக்கு காண்பித்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.