சிப்பாங், நவம்பர் 5 – சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமான பேரிடர் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இன்று மலேசியா வந்துள்ளார்.
எம்எச்19 விமானத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இன்று காலை 7.30 மணிக்கு வந்திறங்கிய ருட்டேவை, துணை தற்காப்பு அமைச்சர் டத்தோ அப்துல் ரஹிம் பக்ரி வரவேற்றார்.
கடந்த 2010 -ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி நெதர்லாந்து பிரதமராகப் பதவி ஏற்ற ருட்டே, நெதர்லாந்து, மலேசியா இடையே சுமூகமான நட்புறவை ஏற்படுத்தும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள முதல் முறையாக மலேசியா வந்துள்ளார்.
இந்நிலையில், புத்ராஜெயாவிலுள்ள டத்தாரன் பெர்டானாவில் ருட்டேவிற்கு தக்க மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ பெர்டானாவில் இன்று மதியம் பிரதமர் நஜிப்புடன் ருட்டேவிற்கு, மதிய உணவு விருந்து ஏற்பாடு செய்யப்படவுள்ளது.