Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஜெய்ஹிந்த் 2’ – பெயரளவில் மட்டும்

திரைவிமர்சனம்: ‘ஜெய்ஹிந்த் 2’ – பெயரளவில் மட்டும்

717
0
SHARE
Ad

2D5A3208_1

கோலாலம்பூர், நவம்பர் 8 – அர்ஜூன் இயக்கத்தில், நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட படம் ‘ஜெய்ஹிந்த்’.

அந்த படத்தில், கதை தொடங்கி சண்டைக்காட்சிகள், நகைச்சுவை, அன்பு, பாசம், காதல் என அத்தனை அம்சங்களிலும் விறுவிறுப்பையும், ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இயக்கியிருப்பார் அர்ஜூன்.

#TamilSchoolmychoice

அதே எதிர்பார்ப்போடு, நேற்று வெளிவந்த அதன் இரண்டாம் பாகமான ‘ஜெய்ஹிந்த் 2’ படத்தில் போய் அமர்ந்தால் நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சும். காரணம் ஜெய்ஹிந்த் படத்தின் கதைக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

மிக மெதுவாக நகரும் திரைக்கதை, நகைச்சுவை என்ற பெயரில் நடிகர் பிரம்மானந்தம் மற்றும் மயில்சாமி குழுவினரின் வரும் காட்சிகள், வெறும் காதல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் கதாநாயகி,  என மொத்தத்தில் ஜெய்ஹிந்த் 2 பெயரவில் மட்டுமே உள்ளது.

கதை என்ன?

1X9A0225_1

கராத்தே மாஸ்டர் அர்ஜூன் சமூகப் பொறுப்பு மிக்கவர். தனது ஓய்வு நேரங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு ஜிம்மில் கராத்தே சொல்லிக் கொடுக்கிறார். கதாநாயகி சுர்தீன் சாவ்லா அர்ஜூன் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருக்கிறார்.

முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் என கதை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, அதே தெருவில் வசிக்கும் இன்னொரு ஏழை கூலித் தொழிலாளியின் குடும்பம். கஷ்டப்பட்டு தனது மகளை தனியார் பள்ளியில் சேர்த்து விடுகிறார் அந்த கூலித்தொழிலாளி.

ஆனால் அடுக்கடுக்காக பள்ளி நிர்வாகம் சொல்லும் கட்டணங்களை அவரால் கட்ட முடியாததால் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

இதனால் மனமுடைந்து போன அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையையும் கொன்று, தாங்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதன் பின்னர் ஆக்சன் கிங் அர்ஜூனின் சாகசங்கள் ஆரம்பிக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவின் பள்ளிகளையும் தேசிய மயமாக்க வேண்டும் என்று போராடுகின்றார். அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி சமாளித்து தனது லட்சியத்தை நிறைவேற்றுகிறார் என்பதே இரண்டாம் பாதி கதை.

நடிப்பு:

_MG_5247

57 வயதிலும் அர்ஜூன் சிக்ஸ் பேக் வயிறு, கல்லு மாதிரி கட்டுடம்போடு இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஆனால் ஒரு காலத்தில், தனது படங்களில் நிறைய வசனங்கள் பேசி இயல்பாக நடித்த அர்ஜூன், ஏன் சமீப கால படங்களில் வசனங்களை குறைத்து மௌன குருவாகவே வலம் வருகிறார் என்பது புரியவில்லை.

ஜெய்ஹிந்த் 2 படத்திலும் படம் தொடங்கியது முதல் எதையோ பறிகொடுத்தவர் போலவே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறார். வடிவேலு இல்லாத குறையை நிறைவேற்ற தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் அர்ஜூனிடம் வந்து வம்பிழுப்பதும், அறை வாங்குவதுமாக படம் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைக்கிறார்.

கதாநாயகி  சுர்தீன் சாவ்லா அர்ஜூனை விட உயரம் என்பதாலோ என்னவோ இருவருக்கும் அதிக நெருக்கமான காட்சிகள் இல்லை. தனது மகள் நடிக்க வந்துவிட்டதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று கூட அர்ஜூன் நினைத்திருக்கலாம்.

கதாநாயகி என்று பெயருக்கு வந்து போகிறார் சுர்தீன் சாவ்லா மற்றபடி அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான காட்சிகள் இல்லை.

இது தவிர கதையில் மனோபாலா, அசத்தப்போவது யாரு சசி, மயில்சாமி போன்ற வெகு குறைந்த தெரிந்த முகங்களே உள்ளனர். அவர்களுக்கும் சொல்லிக்கொள்ளும் படியான காட்சிகள் இல்லை.

ரசிக்க வைத்தவை:

IMG_6682_1

கட்டம் கட்டமாக கதாப்பாத்திரங்களை காட்டி அவர்களுக்கு பின்னால் இருக்கும் கதையை சொல்லிய விதம் புதுமை

ஜெயில் சண்டைக்காட்சிகள், இரண்டாம் பாதியில் கிளைமாக்சில் வரும் சண்டைக்காட்சிகள் அர்ஜூனுக்கே உரிய தனி ரகம்.

காசு கட்டாததால் பள்ளி நிர்வாகம் தனது மகளை வெளியே துரத்தியவுடன், கிட்னியையும் விற்று காசை கொண்டு வரும் ஏழை கூலித் தொழிலாளியின் நிகழ்கால வலியை சொல்லும் காட்சிகள்-

அந்த காட்சிகளைக் கொண்டு வர இயக்குநர் அர்ஜூன் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு பாராட்டுகள்.

வில்லன் நடிகர் ராஹுல் தேவ் சர்மாவின் கதாப்பாத்திரம் இனிமை.

ரசிக்க முடியாமல் போனவை:

கதைக்குத் தேவையில்லாமல் இடையிடையே திணிக்கப்பட்ட நகைச்சுவை.

மெல்ல நகரும் திரைக்கதை.

ஒரு தனி மனிதனின் வார்த்தைகள் ஒட்டுமொத்த இந்தியா காதிலும் விழுந்து விடும் என்று சொல்லுவது சினிமாவிற்கு மட்டுமே. அதை மனதார ரசிக்க முடியவில்லை.

ஒரு தனிமனிதனை (அர்ஜூன்) சாகடிக்க அனைத்துலக அளவில் செயல்படும் தீவிரவாதியை அனுப்புவது போல் தனியார் பள்ளி நிர்வாகிகளைக் காட்டியது.

மொத்தத்தில் இந்த படத்திற்கு ‘ஜெய்ஹிந்த் 2’ என்று பெயர் வைத்திருக்காமல் வேறு ஏதாவது பெயர் வைத்திருக்கலாம்.

‘ஜெய்ஹிந்த்’ படத்தை பார்த்து அதே போன்ற எதிர்பார்ப்போடு போனால் நிச்சயம் ‘ஜெய்ஹிந்த் 2’ ஏமாற்றத்தை அளிக்கும்.

– ஃபீனிக்ஸ்தாசன்