Home நாடு கேஎல்சிசி அருகே வாடகைக் கார் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இந்தியப் பெண்!

கேஎல்சிசி அருகே வாடகைக் கார் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இந்தியப் பெண்!

579
0
SHARE
Ad

Suria-KLCC-9O2கோலாலம்பூர், நவம்பர் 8 – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலைநகர் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே வாடகைக் கார் (டேக்ஸி) ஓட்டுநர் ஒருவர் தன்னை முகத்திலும், தலையிலும் பலமுறை குத்தியதாக மலேசியாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

புதுடெல்லியைச் சேர்ந்தவரான காவ்யா கிரிடி (23 வயது) கடந்த 7 மாதங்களாகக் கோலாலம்பூரில் தங்கி, பணியாற்றி வருகின்றார்.

இரண்டு மாதங்களுக்கு முன் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு சென்று தனது நண்பர்களுடன் சென்று சுற்றிப் பார்த்த பின்னர், அங்கு வாடகை கார் பிடிக்க நினைத்தவர், அங்கிருந்த வாடகைக் கார் ஓட்டுநரிடம் குறிப்பிட்ட இடத்தை கூறி கட்டணம் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அங்கிருந்த வாடகைக் கார் ஓட்டுநர்கள் இவரை சூழ்ந்து கொண்டு அதிக விலை கூறியுள்ளனர். அந்த அதிக கட்டணத்திற்கு காவ்யா மறுக்கவே, உடனே அவரை அவமானப்படுத்தும்படியாகப் பேசியுள்ளனர்.

கேலிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவ்யா, வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவரின் செயலைக் கண்டித்துள்ளார்.

இதனால் அங்கிருந்த வாடகைக்கார் ஓட்டுநர்கள் அவரை அடிக்கத் தொடங்கியுள்ளனர்.

“என்னுடைய தலை, முகம் என மாறி மாறி பலமுறை குத்தினர். அங்கிருந்தவர்களில் எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை” என்று காவ்யா ‘கோகனட் கேஎல்’ என்ற இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட வாடகைக் கார் ஓட்டுநர் மீது காவ்யா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த வாடகைக் கார் ஓட்டுநருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மகளிர் நடவடிக்கை சமூகத்தின் (All Women’s Action Society) துணை திட்ட நிர்வாகி லீ வெய் சான் இது குறித்து கூறுகையில்,”மலேசியாவில் மகளிருக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கும், ஒடுக்குமுறைக்கும் காவ்யா சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கின்றது. தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பொறுத்துக் கொண்டு வாயை மூடிக்கொண்டு பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே ஆண்கள் பலர் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலேசியாவின் நம்பகமான வாடகைக் கார் ஓட்டும் நிறுவனங்களான மை டேக்சி அல்லது உபர் போன்றவற்றைப் பயன்படுத்தும் படி மலேசியாவிற்கு வரும் சுற்றுலா வருபவர்களையும், மலேசியர்களையும் மகளிர் உதவி அமைப்பைச் சேர்ந்த (Women’s Aid Organisation) இயக்குநர் ஐவி ஜோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.