சென்னை, நவம்பர் 10 – தனது தலைமையில் மலர இருக்கும் புதிய கட்சிக்கு நடிகர் ரஜினி ஆதரவளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் புகழ்பெற்றவர் என்பதுடன், எல்லோராலும் விரும்பப்படும் ஒருவர் என்றார்.
காங்கிரசில் இருந்து விலகும் முடிவை வாசன் அறிவித்ததுமே, அவர் தனது தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.மூப்பனாருடன் நெருங்கிப் பழகிய ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்டோரின் ஆதரவை நாடுவார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தமிழக காங்கிரசின் புதிய தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்மையில் கருத்து வெளியிட்டார். ஆனால் இதற்குப் பதிலடி தரும் வகையில் வாசனின் பேட்டி அமைந்துள்ளது.
“ரஜினி எங்களுடைய புதிய கட்சிக்கு ஆதரவு தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ரஜினி போன்ற பிரபலமான, மரியாதைக்குரிய சமுதாயப் பெரியவர்களை எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் கட்சி, இத்தகைய பிரமுகர்களுடன் இணைந்து செயல்படும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்,” என்று வாசன் மேலும் தெரிவித்துள்ளார்.