சென்னை, நவம்பர் 11 – ‘கத்தி’ படத்தின் கதை விவகாரம் தொடர்பாக அண்மையில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார் உதவி இயக்குநர் மீஞ்சூர் கோபி. அப்படத்தின் கதை தன்னுடையது என்பதே அவரது வாதம்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் அறிவுப்பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார் மீஞ்சூர் கோபி என்கிறார்கள் திரையுலகத்தினர்.
ஆனால் அவருடன் வாதாட முடியாத ஏ.ஆர்.முருகதாஸ் உலகத்தில் எந்த புத்திசாலி இயக்குநரும் செய்யாதளவுக்கு ஒரு காரியத்தைச் செய்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் விமர்சிக்கிறார்கள்.
மீஞ்சூர் கோபி அண்மையில் தன்னிடம் உள்ள ஒவ்வொரு ஆதாரத்தையும் விவரித்து ஒரு காணொளி பேட்டியை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பேட்டியை அப்படியே எடுத்து அதில் அவர் பேசப் பேச ஒவ்வொரு வார்த்தைக்கும் கவுண்டமணி செந்தில் பேசிய நகைச்சுவை வசனங்களை நடுவில் சேர்த்து தனது அலுவலக முத்திரையுடன் ஊடகங்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறார் முருகதாஸ்.
“கருத்தை கருத்தால் மோதாமல் இப்படி நகைச்சுவை பண்ணியிருக்கிறாரே… கதை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறிய முருகதாஸ் தரப்பு செய்துள்ள இக்காரியம் மட்டும் நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?” என்று மீஞ்சூர் கோபி தரப்பு கேட்கிறது.