பிலாஸ்பூர், நவம்பர் 12 – சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த அரசு முகாமில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் அடுத்தடுத்து பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, 4 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் கடந்த 8-ஆம் தேதி நடந்தது.
பிலாஸ்பூர் புறநகர் பென்தாரி கிராமத்தில் நேமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த இந்த முகாமில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினர்.இதில், 60 பெண்களுக்கு திடீர் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பிலாஸ்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 8 பெண்கள் இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 52 பெண்களில் 15 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் உடனடியாக தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பெண்கள் பலியானது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ராமன்சிங் அளித்த பேட்டியில், “சிகிச்சையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுப்பதற்கு இல்லை. விசாரணையின் முடிவில் குற்றம்புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்”.
“உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை 2 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்ற பெண்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு தொகையும் மருத்துவச் சிகிச்சை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என மருத்து சேவை துணை இயக்குனர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், சட்டீஸ்கரில் 2011ம் ஆண்டு அரசு சார்பில் நடத்தப்பட்ட கண் அறுவைசிகிச்சை முகாமில், கண் புரை நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்ட 44 பேருக்கு பார்வை பறிபோன சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போன்ற தொடர் மருத்துவ குறைபாடுக்கு பொறுப்பேற்று, மாநில முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளன.