கோலாலம்பூர், நவம்பர் 13 – அயல் நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கான பிஐஓ (PIO) அட்டைகள் வைத்திருப்போர் இனி அவற்றை ஆயுட்காலம் முழுவதும் பயன்படுத்தலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டபோது அங்கு இந்தியர்களிடையே வழங்கிய உரையில் இதற்கான அறிவிப்பை முதன் முறையாக செய்தார்.
“இனி பிஐஓ (PIO) அட்டைகள் வைத்திருப்போர் இந்தியாவில் 180 நாட்களுக்கும் மேல் தங்கியிருக்கும் பட்சத்தில், அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கான பதிவு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது பிஐஓ (PIO) அட்டைகள் வைத்திருப்பவர்கள் அவற்றை இந்திய தூதரகத்தில் அளித்து, ஆயுள் முழுமைக்கும் பயன்படுத்துவதற்கான முத்திரையைப் அதில் பெற்றுக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் ஏதுமில்லை,” என தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பிஐஓ (PIO) அட்டைகள் இனி ஆயுள் முழுமைக்கும் பயன்படும் என்பதால் இந்த முத்திரையை உடனடியாகப் பெற வேண்டிய அவசியம் இல்லை.
இந்த முத்திரையை இந்தியாவில் உள்ள குடிநுழைவு சோதனை மையங்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான அலுவலகங்களிலும் பெறலாம் என தூதரக செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.