பயனர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றத்திற்கும், அளவலாவல்களை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட பேஸ்புக் இன்று வாழ்க்கையில் தவிர்க்க முடியாத, மிக முக்கியப் பயன்பாடாக மாறிவிட்டது.
தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்களை சந்தித்து, பயனர் நிறைவு கொள்ளும் வகையில் சிறந்த செயலியாக உருபெற்றுள்ள பேஸ்புக், தனது பயன்பாடுகளில் மேலும் சிற்சில மாற்றங்களை செய்து வருகின்றது.
அவற்றில் மிக முக்கியமான மாற்றம் தான் பேஸ்புக் மெசெஞ்ஜர். உலக அளவில் தகவல் பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட இந்த செயலியின் மூலமாக தகவல்களை எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒலி ஒளி துணுக்குகளாகவும் அனுப்ப முடியும். மேலும், இதன் மூலமாக இலவச தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துதல், ‘க்ரூப் சேட்’ (Group Chat) எனப்படும் குழுக்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள், படங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.
கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டாயமாக்கியது. இதற்காக பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், நாளுக்கு நாள் மெசெஞ்ஜர் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
மெசெஞ்ஜர் செயலியைக் கட்டாயமாக்கியது பற்றி அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், ” மெசெஞ்ஜர் செயலி கட்டாயமாக்கப்பட்டதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பினாலும், எதிர்காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மெசெஞ்ஜர் செயலி நாளுக்கு நாள் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. அதுவரை பயனர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.