Home One Line P2 இந்தியாவில் இனி வாட்ஸ்எப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்

இந்தியாவில் இனி வாட்ஸ்எப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்

715
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான வாட்ஸ்எப் குறுஞ்செயலி பயனர்கள் இனி அந்த வசதியைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.

கடந்த வார இறுதியில் வாட்ஸ்எப் குறுஞ்செயலியின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்தது. நீண்ட காலமாக இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த புதிய பணப் பரிமாற்ற வசதி அறிமுகம் காண்கிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கியும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக 20 மில்லியன் வாட்ஸ்எப் பயனர்கள் இந்த வசதியைப் பெறுவர்.

கடந்த 2018 முதல் சுமார் 1 மில்லியன் பயனர்களைக் கொண்டு இந்த பணப் பரிமாற்ற வசதியை தொழில்நுட்ப ரீதியாக பேஸ்புக் பரிசோதனை செய்து வந்தது.

உலகிலேயே 400 மில்லியன் பயனர்களோடு மிக அதிகமான வாட்ஸ்எப் பயனர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

வாட்ஸ்எப் புதிய வசதி அறிமுகம் குறித்து பேஸ்புக் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் காணொலி செய்தியின் மூலம் உற்சாகம் தெரிவித்திருக்கிறார்.

“இனி உங்களின் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாட்ஸ்எப் மூலமாக ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதைப் போன்று நீங்கள் பணத்தையும் அனுப்பலாம்” என மார்க் சக்கர்பெர்க் தெரிவித்தார்.

வாட்ஸ்எப் குறுஞ்செயலி இந்தியாவில் 10 மொழிகளில் இயங்கி வருகிறது. ஆகக் கடைசியாக மேம்படுத்தப்பட்ட குறுஞ்செயலியைக் கொண்டு பணப் பரிமாற்ற வசதியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணப்பரிமாற்ற வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள் ஒரு வங்கிக் கணக்கையும், அதன் தொடர்புடைய வங்கி அட்டையையும் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் வங்கி இந்தியாவின் மற்ற குறுஞ்செயலிகளின் மூலம் பணப் பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்

பெரிய அளவில் பேஸ்புக் இந்தியாவைத் தளமாகக் கொண்டு தனது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் 5.7 பில்லியன் டாலர் முதலீடு செய்தது.

அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க், வாட்ஸ்எப் தொடங்கவிருக்கும் பணப் பரிமாற்ற வசதியில் பங்கு பெற்றிருக்கும் இணை நிறுவனங்களில் ஒன்றாகும்.