சான் பிரான்சிஸ்கோ, நவம்பர் 13 – அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விமான தளத்தை, கூகுள் நிறுவனம் 1.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 60 ஆண்டுகள் பயன்படுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ள மோபட் விமானத் தளம் தற்போது நாசாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விமான தளம், 1931-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டில் இருந்தது. எனினும் பல்வேறு காரணங்களுக்காக விமானத் தளம் முழுமையாக மூடப்பட்டது.
3 மூடிய விமான கூடங்கள், 2 ஓடுபாதைகள், ஒரு கோல்ஃப் விளையாட்டு மைதானம் மற்றுமொரு அருங்காட்சியகம் ஆகியவை உள்ள இந்த விமான தளத்தை கூகுள் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனால் சுமார் 1.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 60 ஆண்டுகள் பயன்படுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:-
“சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து விமான தளம் புதுப்பிக்கப்பட இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து விரைவில் விண்வெளி ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும். எங்கள் நிறுவனத்தின் விமானங்களை நிறுத்திவைக்கவும் விமான தளத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.