கோலாலம்பூர், நவம்பர் 14 – பினாங்கில் , அம்மாநில துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த வைகோ அம்மாநாட்டில் கலந்து கொண்டதோடு, சில மக்கள் சந்திப்புக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
ஈப்போவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய வைகோ, பினாங்கு மாநிலத்தின் பட்டவொர்த் நகரில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
அந்த கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, பினாங்கு துணை முதல்வர் இராமசாமி மீது இந்திய அரசாங்கம் விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து தனது கண்டனத்தையும் வைகோ பதிவு செய்தார். இராமசாமி மீதான தடையை முறியடிக்க தான் பாடுபடப் போவதாகவும் வைகோ சூளுரைத்துள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாடு, தமிழகத்தில் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் காரணமாக இராமசாமி இந்தியாவில் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஆனால், அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சி மாறி பாஜக ஆட்சி நடைபெறுவதால், இராமசாமி மீதான அதே கொள்கையை பாஜகவும் பின்பற்றுகின்றதா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
வைகோவின் மதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருக்கின்றது என்பதோடு, வைகோ, பிரதமர் நரேந்திர மோடி முதற்கொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரை பல பாஜக தலைவர்களுடன் நெருக்கமான நட்பைப் பாராட்டி வருபவர்.
எனவே, வைகோ நேரடி முயற்சி எடுத்து நடவடிக்கையில் இறங்கினால், அதன் மூலம் இராமசாமி மீது நீண்ட நாட்களாக இருந்து வரும், இந்தியாவில் நுழைவதற்கான தடை நீக்கப்படலாம்.