Home நாடு பைபிள் ஒப்படைப்பு: சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்கு சிந்தனை – அஸ்மின் அலி பாராட்டு

பைபிள் ஒப்படைப்பு: சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்கு சிந்தனை – அஸ்மின் அலி பாராட்டு

833
0
SHARE
Ad

sultan selangorஷா ஆலாம், நவம்பர் 14 – இஸ்லாமிய இலாகாவால் கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்கள் மீண்டும் சரவாக் கிறிஸ்துவ தேவாலயங்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கும், இந்த விவகாரம் சுமுகமாக நிறைவு பெற்றதற்கும் சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்குச் சிந்தனையும், சமய சகிப்புத் தன்மையோடு கூடிய முயற்சியும்தான் காரணம் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும்பாடுபட்ட சிலாங்கூர் மாநில இஸ்லாமிய இலாகாவையும், சரவாக் கிறிஸ்துவ தேவாலயங்களின் சங்கத்தினரையும் அஸ்மின் அலி பாராட்டினார்.

“எல்லா தரப்பினரும் எடுத்த உண்மையான, நேர்மையான முயற்சிகளின் காரணமாகவும், சக சமயங்களை சகிப்புத் தன்மையோடு மதிக்கும் பண்பினாலும்தான் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது” என அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்தில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் சிறந்த நல்லுறவு ஏற்பட தனது நிர்வாகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என பத்திரிக்கை அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்த அஸ்மின் அலி, கைப்பற்றப்பட்ட பைபிள்கள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக நினைவுபடுத்தினார்.

அந்த பைபிள்கள் கிறிஸ்துவர்களுடையது என்பதால் அவர்களிடம்தான் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற தனது முடிவையும் அவர் வலியுறுத்தினார்.

இவையெல்லாம் சாத்தியமானதற்கு சிலாங்கூர் சுல்தானின் நன்னறிவும், தூரநோக்குப் பார்வையும்தான் காரணம் என்பதால் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

இன்று பைபிள்கள் கிறிஸ்துவ சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு சிலாங்கூர் சுல்தான், அஸ்மின் அலி, சிலாங்கூர் முஃப்டி டத்தோ முகமட் தமிஸ், சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா (ஜாய்ஸ்) இயக்குநர் அகமட் சஹாரின் முகமட் சாட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.