கோலாலம்பூர், நவம்பர் 16 – ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ என கட்டம் கட்டமாக, ஆனால் அழுத்தமாக, தமிழ் சினிமாவில் கால் பதித்து வரும் ரஞ்சித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’.
தந்தை காவல் துறையில் ஒரு கடமை தவறாத ஹெட்-கான்ஸ்டபிள். மகன் வேலையில்லாமலும் அப்பாவின் சொல் பேச்சு கேட்காமலும் ஊர் வம்பை இழுத்துக்கொண்டு சுற்றுபவன். தந்தைக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகளே எஞ்சியுள்ள நேரத்தில், ஒரு ரவுடியை என்கவுன்டர் செய்யப்போகும் சம்பவத்தில் அவர் கொல்லப்படுகிறார்.
வீர மரணம் அடைந்த தந்தையின் கான்ஸ்டபிள் வேலை மகனுக்கு கிடைக்க, ‘போச்சுடா, வழக்கம் போல அப்பாவ கொன்னவங்கல ஹீரோ படம் முழுக்க துரத்தி துரத்தி பழி வாங்க போறாரு!!,’ என நாம் நினைத்து உட்கார்ந்தால் படத்தில் பல ஆச்சரியங்கள். எஸ்.பி.பி சரண், ஜே.செல்வகுமாருடன் இப்படத்தை இணைந்து தயாரிக்க, எழுதி இயக்கியிருப்பவர் கார்த்திக் ராஜூ.
முதல் பாதி முழுவதும் ஒரு போலீஸ் குடியிருப்பில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்கள், ஒரு சாதாரண கான்ஸ்டபிள் சந்திக்கும் கஷ்டங்கள் என நகர்ந்தாலும், நகைச்சுவை கலந்து திரைக்கதையை கையாண்ட விதத்தில் அறிமுக இயக்குனர் கார்த்திக் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
சாலையில் காரில் செல்லும் வி.ஐ.பிகளுக்கு சல்யூட் அடிக்க மணிக்கணக்கில் வெயிலில் காய்ந்து கிடப்பது முதல் ஜெயில் கைதிகளை கையாள்வதில் ஏற்படும் பிரச்சனைகள் வரை, சாதாரண கான்ஸ்டபிள் வாழ்க்கையின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
‘அட்டை கத்தி’ படத்தில் அறிமுகமாகி, ‘குக்கூ’விலும் பலரது கவனத்தை இழுத்த தினேஷ் இதில் இன்னும் அழுத்தமான ஒரு முத்திரையை பதித்திருக்கிறார்.
முற்பாதியில் ‘அப்பா இறந்துட்டாரு, என்னன்னு தெரியல எனக்கு அழுகையே வரமாட்டேங்குது!’ என நண்பரிடம் மிக சாதாரணமாக கூறும்போதும், பிறகு வேலை கிடைத்ததும் தன் தந்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த கான்ஸ்டபில் வேலையில் எவ்வளவு அவமானங்களையும் உடல் உளைச்சலையும் சந்தித்திருப்பார் என நினைத்து அதே நண்பரிடம் அழுதுகொண்டே புலம்பும்போதும், ஒரு தேர்ந்த நடிகராக தினேஷ் மனதில் நிற்கிறார். டூயட் பாடல் காட்சிகளில் மட்டும் ஏனோ திணறுகிறார்.
தினேஷுக்கு தந்தையாக வரும் நடிகர் ராஜேஷ் தனது அனுபவத்தால் அந்த கதாபாத்திரத்துக்கு மேலும் வலுவூட்டியிருக்கிறார். கமிஷனராக வரும் நரேன் நல்ல தேர்வு. கதாநாயகி ஐஸ்வர்யா அழகாக இருக்கிறார், அவ்வளவே!
தினேஷின் நண்பராக வரும் பாலா சரவணன் தனது வசனங்களால் கைதட்டல்களை அள்ளுகிறார். துணை நடிகர்கள் அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து நன்றாகவே செய்திருக்கின்றனர். முக்கியமாக படத்தில் வில்லன்+காமெடியன்களாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் படத்துக்கு பலம்.
பொதுவாக ஏதாவது ஒரு நடிகையை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட அழைப்பார்கள். ஆனால் இதில் நடிகர் விஜய் சேதுபதியை, ‘அடியே! வா குத்தாட்டம் போடு’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட வைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இசை யுவன் ஷங்கர் ராஜா(வா!!). பாடல்களிலும் பின்னனி இசையிலும் பெரிதாக ஒன்றும் ஈர்ப்பு இல்லை.
படம் மிக மிக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பது சில இடங்களில் தெளிவாகத் தெரிந்தாலும், சித்தார்த்தின் ஒளிப்பதிவும், ப்ரவின் K.L படத்தொகுப்பும், பல இடங்களில் அதை நன்றாகவே சமாளித்திருக்கிறது.
படத்தின் பெரிய பலவீனம் இரண்டாம் பாதியின் திரைக்கதை. எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் ஒரே வேகத்தில் நகர்கிறது. தினேஷ்-ஐஸ்வர்யா காதல் காட்சிகளில் சுவாரஸ்யம் ஒன்றும் இல்லை.
இப்படி சில சறுக்கல்கள் இரண்டாம் பாதியில் இருந்தாலும், படத்தின் முடிவில் அதையெல்லாம் சரிகட்டி விடுகிறார் இயக்குனர். படத்தின் இறுதியில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் தந்தையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திரையில் சுழன்றோடும் டைட்டிலோடு ஓடவிட்டிருப்பது நல்ல டச்.
வழக்கமான தந்தையின் சாவுக்கு பழிவாங்கும் கதைதான் என்றாலும் புதுமையான கோணத்தில், நகைச்சுவை கலந்த திரைக்கதையோடு கொடுத்த இயக்குனருக்கும், தரமான திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.
“திருடன் போலிஸ் – வரவேற்கலாம்.
-செல்லியல் ஆசிரியர் குழு