Home நாடு அம்பிகா : வெளிநாடுகளில் மாலை மரியாதை! உள்நாட்டிலோ, சொந்த மாநிலத்தில் நுழையத் தடை!

அம்பிகா : வெளிநாடுகளில் மாலை மரியாதை! உள்நாட்டிலோ, சொந்த மாநிலத்தில் நுழையத் தடை!

716
0
SHARE
Ad

ambigaகோலாலம்பூர், நவம்பர் 16 – நமது நாட்டின் சபா மாநிலத்தில் நுழைவதற்கு வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான அம்பிகா சீனிவாசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, மலேசியர்களைப் பொறுத்தவரையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல.

இருப்பினும், அம்பிகாவின் போராட்ட உணர்வுகளும், சமூக நன்னோக்கும் வெளிநாட்டில் பல அமைப்புகளை ஈர்த்து அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகள் அவருக்கு வரவேற்பும், வாழ்த்துகளும், விருதுகளும் வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், நமது நாட்டின் ஒரு மாநிலமான சபாவில் நுழைவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமைதான் ஹாங்காங்கில் நடைபெற்ற ‘யூரோ மனி’ என்ற நிறுவனத்தின் வர்த்தக, சட்ட 2014ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவின் போது, அம்பிகாவுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.

ஏற்கனவே, அமெரிக்காவின் சிறப்பு விருதொன்றை அமெரிக்க அதிபர் மாளிகையில் அம்பிகா பெற்றிருக்கின்றார்.

எதிர்வரும் நவம்பர் 25ஆம் தேதி கோத்தா கினபாலுவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள சபா செல்லவிருந்த அம்பிகா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபா குடிநுழைவு இலாகாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி தன்மீது தடை ஏதும் இருக்கின்றதா என்பது குறித்து வினவியிருக்கின்றார்.

அந்தக் கடிதத்திற்கு பதிலளித்த சபா குடிநுழைவுத் துறை, அம்பிகாவின் கடிதத்தை மேற்கோள் காட்டி, சபாவில் நுழைவதற்கான அவரது அனுமதி விண்ணப்பம் சம்பந்தப்பட்ட சபா மாநில அரசு அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளது என பதிலளித்திருக்கின்றார்.

நீதிமன்றத்தில் உரிமைக்காக போராடுவேன் – அம்பிகா சூளுரை

கடந்த காலங்களில் தேர்தல் மறு சீரமைப்புக்குப் போராடும் பெர்சே இயக்கத்தின் தலைவராகவும், மலேசிய வழக்கறிஞர் கழகத்தின் தலைவராகும் அம்பிகா பணியாற்றியிருக்கின்றார்.

தற்போது ‘நெகாரா-கு’ (Negara-Ku) என்ற மக்கள் சீர்திருத்த இயக்கத்தின் புரவலராக அவர் பணியாற்றி வருகின்றார். இந்த இயக்கத்தின் சார்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் அவர் சபா செல்லவிருந்தார்.

இது குறித்து மலேசியன் இன்சைடர் இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில், “இது எனது நாடு. இங்கு எனக்கென உரிமைகள் இருக்கின்றன. நான் குடிநுழைவுத் துறையின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை. மாறாக, எனது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன்” என அம்பிகா சூளுரைத்துள்ளார்.