அம்பாலா, நவம்பர் 16 – புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள சிறுவனை போர் விமானத்தில் பறக்க வைத்து அவனது ஆசையை நிறைவேற்றியுள்ளது இந்திய விமானப்படை.
பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சந்தன், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பெற வசதியின்றி டெல்லி மருத்துவமனைக்கு வெளியே உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்துக் கிடந்தான் சந்தன்.
சிறுவனின் நிலையைக் கண்ட ஒரு பத்திரிகையாளர் இச்செய்தியை வெளியிட, பல்வேறு தரப்பினரும் சிகிச்சைக்கு நிதி அளித்தனர். இதன்மூலம் திரண்ட ரூபாய் 12 லட்சத்தை வைத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் நோய் தீவிரமாக பரவி, எந்த நேரமும் இறக்கலாம் என்ற நிலையில் உள்ளான் சிறுவன் சந்தன். இந்நிலையில் போர் விமானத்தில் ஒரு முறையேனும் பறக்க வேண்டும் என்கிற சந்தனின் ஆசை குறித்து தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தெரிய வந்தது.
அந்நிறுவனத்தார் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.
இதையடுத்து அரியானா மாநிலம் அம்பாலா நகரில் உள்ள, விமானப் படை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் சந்தனுக்கு, போர் விமானங்களை இயக்கும் விமானி போல சீருடை அணிவிக்கப்பட்டது.
மாதிரி விமானம் ஒன்றில் சிறிது நேரம் பயிற்சி பெற்ற பின், போர் விமானத்தில் அந்தச் சிறுவன் ஏற்றி செல்லப்பட்டான். இந்த அனுபவத்தால் பரவசம் அடைந்த சிறுவனின் முகத்தில் பெரிதாக புன்னகை பூத்தது.
“போர் விமானத்தை இயக்குவது என்பது பெரிய சாதனை அல்ல. புற்றுநோயை எதிர்த்து வாழ்வதுதான் பெரிது. அச்சாதனையை நிகழ்த்தி வரும் இச்சிறுவனின் விருப்பத்தை பூர்த்தி செய்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி” என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.