கோலாலம்பூர், நவம்பர் 18 – நாடறிந்த பிரபல கவிஞரும், மலேசியத் தமிழ்க் கவிதை உலகில் தனி முத்திரை பதித்தவருமான டி.எஸ்.பொன்னுசாமி தமிழகத்தில் உடல் நலக் குறைவினால் காலமானார்.
சிறந்த பேச்சாளருமான பொன்னுசாமி, தனது கவிதைகளை கனல் கக்கும் வார்த்தைகளால் வார்த்தெடுத்த காரணத்தால், ‘தீப்பொறி’ என்ற அடைமொழியை தமிழ் எழுத்துலகில் பெற்றார்.
அவர் சில கவிதை நூல்களையும் படைத்திருக்கின்றார்.
ஆரம்ப காலங்களில் தமிழ் நேசன் பத்திரிக்கையில் ஆசிரியர் குழுவில் அவர் பணியாற்றியிருக்கின்றார்.
பின்னர் மற்ற பத்திரிக்கைகளிலும், ஆகக் கடைசியாக, மலேசிய நண்பன் பத்திரிக்கையிலும் பணியாற்றியிருக்கின்றார்.
சிறந்த கவிஞராக உலா வந்ததோடு நில்லாமல், பல மாணாக்கர்களுக்கு, யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்து அவர்களையும் கவிஞர்களாக உருவாக்கினார். அதன் காரணமாக, அவரது பயிற்சியினால் கவிஞர்களாக உருவானவர்கள், தங்களின் பெயர்களுக்கு முன்னால் பொன். (பொன்னுசாமி என்பதன் சுருக்கம்) என்ற அடைமொழியைப் பயன்படுத்தினர்.
அவரது கவிதா மாணாக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் அண்மையில் காலமான அமரர் பொன்.நாவலன் ஆவார்.
பொன்.கோகிலத்தின் தந்தை
தீப்பொறிக் கவிஞர் பொன்னுசாமி, மலேசிய மின்னல் வானொலியின் பிரபல அறிவிப்பாளர் பொன்.கோகிலத்தின் தந்தையுமாவார்.
அன்னாரைப் பிரிந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ‘செல்லியல்’ சார்பில் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.