Home நாடு அரசியல் பார்வை : மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிபி தலைவராக கேவியஸ்!

அரசியல் பார்வை : மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிபி தலைவராக கேவியஸ்!

723
0
SHARE
Ad

Kayveasகோலாலம்பூர், நவம்பர் 19 – தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கொண்ட தவணைக்கு அதன் நடப்புத் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 30ஆம் தேதி அந்தக் கட்சியின் ஆண்டு மாநாடும், கட்சித் தேர்தல்களும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டின் மற்ற அரசியல் கட்சிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் வேளையில் பிபிபி கட்சி மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல்களை நடத்துகின்றது.

#TamilSchoolmychoice

சில வருடங்களுக்கு முன்னால் இதுதான் எனது கடைசித் தவணையாக இருக்கும் அடுத்த கட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஒரு முறை அறிவித்திருந்த கேவியஸ், தற்போது மீண்டும் தேசியத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு பெற்றிருக்கின்றார்.

மலேசிய அரசியலில் சிறிய கட்சியாக இருந்தாலும், பெரிய கட்சியாக இருந்தாலும், தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பது என்பதும், அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவது என்பதும் மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகின்றது.

அந்த நிலைமைதான் பிபிபி கட்சியிலும் இன்றைக்கு நிலவி வருகின்றது.

அந்த வகையில் 1993ஆம் ஆண்டு முதற்கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக பிபிபி கட்சியை வலுவான ஆளுமையுடன் வழி நடத்தி வருகின்றார் கேவியஸ்.

கட்சியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றவர்

Kayveasகேவியஸ் தலைமைத்துவம் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அவரது தலைமை இன்னும் நீடித்துத் தொடர்வது குறித்து விமர்சனங்கள், குறை கூறல்கள் எழலாம்.

இருப்பினும், அணிகளுக்கிடையிலான பதவிப் போராட்டங்களால், மலேசிய அரசியலில் உரிய அந்தஸ்து கிடைக்காமல் – பேராக்கில் மட்டும் சற்று வேரூன்றியிருந்த கட்சியை, கடந்த 20 ஆண்டுகளில் தேசியக் கட்சியாக, ஒரு வலுவுள்ள அரசியல் அமைப்பாக உருவாக்கியதில் கேவியசுக்கு பெரும்பங்கு உண்டு.

குறிப்பாக, தீபகற்ப மலேசியாவில் மஇகாவுக்கு அடுத்த நிலையில் பெருவாரியான, தேசிய முன்னணியை ஆதரிக்கும் இந்தியர்களை ஈர்த்துள்ள கட்சியாக பிபிபி உருவெடுத்துள்ளது.

1990ஆம் – 2000ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த மஇகா போராட்டங்களால் அந்தக் கட்சியிலிருந்து பல காரணங்களுக்காக வெளியேறியவர்கள் – வெளியேற்றப் பட்டவர்கள் – தேசிய முன்னணி பக்கம் சார்ந்திருக்க விரும்பியவர்கள் – எனப் பலதரப்பட்ட இந்தியர்களை ஈர்க்கும் அளவுக்கு பிபிபி கட்சியை உருமாற்றிக் காட்டியவர் கேவியஸ்.

அந்த காலகட்டத்தில் மஇகாவின் பலவீனமே பிபிபியின் அசுரத்தனமான அரசியல் வளர்ச்சிக்கு உரமாக அமைந்தது என்பதையும் யாரும் மறந்து விட முடியாது.

இன்றைக்கு பிபிபி கட்சிக்கு தேசிய முன்னணியிலும், மக்கள் மத்தியிலும், அரசியல் அரங்கிலும் ஒரு கௌரவமான இடத்தைப் பெறுவதற்கு கேவியசின் ஆற்றல் மிக்க தலைமைத்துவமும் ஒரு காரணம்.

பலஇனக் கட்சியாக பிபிபி அடையாளம் காணப்பட்டாலும், அதன் உறுப்பினர் எண்ணிக்கை, தலைமைத்துவ பங்கெடுப்பு என அனைத்து அம்சங்களையும் வைத்துப் பார்க்கும்போது, பிபிபி இன்னொரு இந்தியர் சார்பு கட்சியாகவே பார்க்கப்படுகின்றது.

அந்தக் கட்சியின் கிளை, உறுப்பினர் விகிதாச்சாரம் போன்ற அம்சங்களை ஆராய்ந்து பார்த்தால், எதிர்காலத்திலும் அந்தக் கட்சியில் இந்தியர் ஒருவர்தான் தலைமைத்துவத்தை ஏற்க முடியும் என்பது விளங்கும்.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ‘தாய்மொழி’ தமிழ் நாளிதழின் பின்னணியிலும், பிபிபி கட்சியும், அதன் தலைவர் கேவியசும் இருக்கின்றார்கள் என்பதிலிருந்து அந்த கட்சி தமிழ் மொழிக்கும், இந்தியர்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க வேண்டும்

ஆனால், பிபிபி கட்சியைப் பொறுத்தவரையில் கேவியசுக்கு அடுத்த நிலையில் கட்சியை வழி நடத்த பொருத்தமான தலைவர் ஒருவர் இல்லாதது போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பது அந்தக் கட்சியின் ஒரு கவனிக்கப்படத்தக்க குறை என்றே கூறவேண்டும்.

மலேசியாவின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் துணைத் தலைவர் என்ற பதவி இருக்கும்போது, அப்படி ஒரு பதவியே இல்லாத கட்சி பிபிபி. அங்கே, முதல் நிலை உதவித் தலைவர் ஒருவரும் மற்றும் ஐந்து உதவித் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

இந்த முறை நடைபெறும் போட்டியிலும் ஒரு சிலர் உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்டாலும் கேவியஸ் விரல் காட்டும் – விருப்பம் காட்டும் – நபர்களே உதவித் தலைவர் பதவிகளுக்கும், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது உறுதி

சீனிவாசகம் சகோதரர்களால் எதிர்க்கட்சியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தேசிய முன்னணியில் இணைந்த பிபிபி, பல இன கட்சியாக மலேசிய அரசியலில் ஒரு பாரம்பரியமிக்க வரலாற்றைக் கொண்டது.

Loga Bala Moganஆனால் இன்று, அந்த கட்சி பலஇன கட்சியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முடியாமல், முழுக்க, முழுக்க இந்தியர் கட்சியாகவும் உருவெடுக்க முடியாமல், ஒருவிதமான அடையாளச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியையும், சட்டமன்றத் தொகுதியையும் பொதுத் தேர்தலில் பிபிபியால் வெல்ல முடியவில்லை.

ஒரு செனட்டர் பதவி அதனை வகிப்பவருக்கு துணையமைச்சர் பதவி -, மேலும் சில அரசு சார்பு நியமனங்கள் – இவற்றை மட்டுமே கொண்டு, அரசியல் நடத்த வேண்டிய நிலைமையில் பிபிபி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது, டத்தோ லோகபாலன் (படம்) பிபிபி சார்பில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராகவும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

சவால் மிக்க அடுத்த 5 ஆண்டுகள் 

pppமீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற முறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கேவியஸ் தனது ஆதிக்கக் கரங்களைக் கொண்டு, கட்சியை சிறப்பாக வழிநடத்துவார் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இனிவரும் 5 ஆண்டுகள்தான் அவருக்கு  பெரும் சவாலாக இருக்கப் போகின்றன.

தனக்குப் பின்னர் கட்சித் தலைமையை ஏற்கக் கூடிய திறன்வாய்ந்த ஒருவரை அவர் அடையாளம் கண்டு அவர் அறிமுகப்படுத்த வேண்டும். அத்தகைய தலைவருக்கு பிபிபி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும், தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு செல்வாக்கும் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஐந்து உதவித் தலைவர்களை மட்டுமே கொண்ட – தேசியத் துணைத் தலைவர் என்ற தெளிவான பதவி இல்லாத – அந்தக் கட்சி ஒரு காலகட்டத்தில் மீண்டும் பதவிப் போராட்ட சூழலுக்குள் தள்ளப்பட்டு, இத்தனை காலமாக உருவாக்கப்பட்டு வந்த தனது மகிமையை இழக்க நேரிடலாம்.

அடுத்த சவால், வரும் பொதுத் தேர்தலில் வெல்வதற்குரிய நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களை அடையாளம் காண்பதும், அந்த தொகுதிகளை தேசிய முன்னணியின் மற்ற கட்சிகளோடு பங்கிட்டுக் கொள்வதும்!

புதிய தொகுதிகள் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்படாவிட்டால், தற்போது இருக்கின்ற தொகுதிகளுள் ஓரிரண்டை கடுமையானப் போராட்டத்துக்குப் பின்னரே தேசிய முன்னணி பங்கீட்டிலிருந்து பிபிபி பெற முடியும். அப்படியே, பெற்றாலும் அந்தத்த தொகுதிகளை வென்றெடுப்படு அதைவிடப் பெரிய சவாலாக இருக்கும்.

பிபிபி தொடர்ந்து பலஇன கட்சியாக வெற்றிகரமாக செயல்பட முடியுமா அல்லது தொடர்ந்து இந்தியர் கட்சியாக குரல் கொடுத்து வருமா என்ற அடையாளச் சிக்கலுக்கும் கேவியஸ் காலப் போக்கில் விடை கண்டுபிடித்தாக வேண்டும்.

இன்றைக்கு மஇகா, இரண்டு அமைச்சர்கள், இரண்டு துணையமைச்சர்கள் என வலுவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் மஇகா உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி பிபிபிக்கு இல்லை.

இளைய சமுதாய இந்தியர்களோ, எதிர்க்கட்சி அரசியலில் காட்டும் ஆர்வத்தை மஇகாவிலோ, பிபிபி கட்சியிலோ காட்டுவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த 14வது பொதுத் தேர்தலில் மீண்டும் எந்த அளவுக்கு தேசிய முன்னணி வெற்றி வாகை சூட முடியும் என்பதை வைத்துத்தான், அந்தக் கூட்டணியைச் சார்ந்திருக்கும் பிபிபியின் எதிர்காலமும் அமையும்.

இத்தகைய சவால்களோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, பிபிபியின் தேசியத் தலைவர் பொறுப்பை ஏற்கும் கேவியசுக்கு நமது வாழ்த்துகள்!

-இரா.முத்தரசன்