பெய்ஜிங், நவம்பர் 19 – இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு போர் பயிற்சி அளிக்கவில்லை என சீனா தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதி அருகே உள்ள ரஜோரி எனும் இடத்தில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு, சீன இராணுவத்தினர் போர் பயிற்சிகள் அளிப்பதாக இந்திய எல்லை பாதுகாப்புப் படை இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரான ஹாங் லெய் கூறுகையில்,
“பாகிஸ்தான் இராணுவத்திற்கு சீன இராணுவ வீரர்கள் பயிற்சி அளிப்பதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. எனினும், சீனாவிடமிருந்து தான் பாகிஸ்தான் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகின்றது”.
“அதன் காரணமாக அந்த ஆயுதங்களைக் கையாள்வது எப்படி என்ற அடிப்படை பயிற்சிகளையே சீனா, பாகிஸ்தான் இராணுவத்திற்கு கொடுத்து வருகின்றது. இத்தகைய பயிற்சி அசாதாரணமான ஒன்றல்ல” என்று அவர் கூறியுள்ளார்.