கோலதிரங்கானு, நவம்பர் 19 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு
வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை திரங்கானு மாநிலத்தில் 2353 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 9 மணி அளவிலான நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்ட தேசிய
பாதுகாப்பு மன்றம், திரங்கானுவில் தற்போது 5 மாவட்டங்கள் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோலதிரங்கானு, உலுதிரங்கானு, செதியு, பெசுட் மற்றும் மாராங் ஆகியவையே அந்த
5 மாவட்டங்களாகும். இவற்றுள் கோலதிரங்கானுவில் தான் மிக அதிகமான 412
குடும்பங்களைச் சேர்ந்த 1594 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 11 பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தற்காலிகமாக
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் உலுதிரங்கானுவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செதியுவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மாராங்கில் 163 குடும்பங்களைச் சேர்ந்த 677 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்குவதற்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளப் பகுதியிலிருந்து பொது மக்களை மீட்கும் நடவடிக்கை சுமுகமாக நடைபெற்றதாகவும், அரசுத் தரப்பில் அனைத்துவித உதவிகளும் கிடைத்ததாகவும் மீட்கப்பட்டவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.